Last Updated : 12 Jan, 2014 12:00 AM

 

Published : 12 Jan 2014 12:00 AM
Last Updated : 12 Jan 2014 12:00 AM

இளம் சாதனையாளர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து இளம் சாதனையாளர்களுடன், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பெங்களூரில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலில் 250 சாதனையாளர்களிடம், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து கருத்துக் கேட்கப்பட்டது.

அப்போது பேசிய அனைவரும், காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இளைஞர்களை ஈர்க்கின்ற வகையில் புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும். அனைவருக்கும் கல்லூரி வரை இலவச கல்வி அல்லது மிக குறைந்த கட்டணத்தில் கல்லூரி படிப்பு, அனைவருக்கும் கல்விக் கடன், கிராமப்புறங்களில் தொழில்நுட்பக் கல்லூரிகள் ஏற்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும். இளம் தொழில் முனைவோர்களுக்கு சலுகைகள் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: “ஏழை, பணக்காரன், ஜாதி, மத பேதங்களை கடந்து ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் காங்கிரஸ் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் நம்மை விட குறைவாக பணியாற்றிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள், தங்களைப் பற்றி சிறப்பாக பிரச்சாரம் செய்கின்றன. ஆனால், பல்வேறு பணிகளை மேற்கொண்டும், நம்மால் அந்தளவுக்கு மக்களிடம் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. எதிர்க்கட்சிகளிடம் பார்த்து காங்கிரஸ் சிலவற்றை கற்க வேண்டும்.

அதே போல முன்பு எப்போதையும் விட இந்த முறை வேட்பாளர் தேர்வில் நிச்சயம் பல மாற்றங்கள் இருக்கும். இன்றைய சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு மிகுந்த கவலையளிக்கிறது. பெண் உரிமை மற்றும் மேம்பாடு தொடர்பான திட்டங்களை காங்கிரஸ் கட்டாயம் கொண்டுவரும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி கூறியதாவது: “வருகின்ற தேர்தலில் இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்படும்.

அதுமட்டுமில்லாமல் பா.ஜ.க.வின் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை செய்தோம். நாட்டின் பெருநகரங்களில் ஆம் ஆத்மி கட்சி ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் குறித்தும் விவாதித்தோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x