சிறுபான்மையினர் வாக்குகளை பெற கேரளாவில் பாஜக வியூகம்

சிறுபான்மையினர் வாக்குகளை பெற கேரளாவில் பாஜக வியூகம்
Updated on
1 min read

கேரள சட்டப்பேரவையில் தற்போது பாஜக.வுக்கு ஒரே ஒரு எம்எல்ஏ.தான் உள்ளார். வரும் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெறும் இலக்கோடு பாஜக களப்பணி ஆற்றி வருகிறது. இதன் அங்கமாக சிறுபான்மையினரையும் கணிசமாக கட்சியில் இணைத்து மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுக்க தீவிரமாக முயற்சி மேற்கொண் டுள்ளது.

அதற்கேற்ப ஓய்வுப் பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜேக்கப் தாமஸ் பாஜக.வில் இணைந்தார். அதேநேரத்தில் கேரள ஜனபக்சம் கட்சியை காங்கிரஸ் கூட்டணிக்குள் வைத்திருக்க முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி முட்டுக்கட்டை போட அவரையும் பாஜக வளைத்திருக்கிறது.

பூஞ்ஞார் தொகுதியில் எம்எல்ஏ.வாக இருக்கும் பி.சி.ஜார்ஜ்ஜின் ஜனபக்சம் கட்சிக்கு கோட்டயம் மாவட்டத்தில் நல்ல செல்வாக்கு உள்ளது. இதே தொகுதியில் இருந்து 6 முறை எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜார்ஜ், இப்போது பாஜக கூட்டணிக்கு நகர்ந்திருக்கிறார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கிறிஸ்தவரான ஜார்ஜ் தன் பங்காக ஆயிரம் ரூபாய் நிதியும் கொடுத்து கூட்டணியை உறுதி செய்திருக்கிறார்.

ஏற்கெனவே சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த முன்னாள் ஐஏஏஸ் அதிகாரி அல்போன்ஸ் கண்ணந்தானத்தை, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங் களவை எம்.பி.யாக்கி இருந்தது பாஜக. அவர் மூலம் சிறுபான்மை சமூகத்தினர் மத்தியிலும் பாஜக.வின் குரலை கொண்டு சேர்க்கின்றனர். உச்சமாக பாஜக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ஷோபா சுரேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் கும்மனம் ராஜசேகரன் ஆகியோர் முஸ்லிம் லீக் கட்சியை வரவேற்க தயாராயினர். அதற்குள் காங்கிரஸ் கட்சி, முஸ்லீக் லீக்கிற்கு 23 தொகுதிகளை முந்திக் கொண்டு அறிவித்துள்ளது.

இதேபோல் நேற்று கேரள மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளரும், கர்நாடக துணை முதல்வருமான அஸ்வத் நாராயன், சீரோமலபார் திருச்சபைகளின் ஆயர் ஜார்ஜ் ஆலஞ்சேரியை சந்தித்தார். அதன்பின்னர் கேரள பாஜக.வில் கிறிஸ்தவ வேட்பாளர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு கொடுப்போம் என்று அஸ்வத் நாராயன் தெரிவித்தார்.

இதற்கிடையில், கேரள ‘மெட்ரோமேன்’ இ. தரன், சின்னத்திரை நடிகர் கிருஷ்ணகுமார் உட்பட பலரும் பாஜக.வில் இணைந்துள்ளனர். இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ரவீந்திரன், சிதம்பரேஸ், முன்னாள் டிஜிபி வேணுகோபால் உட்பட பலரும் நேற்று பாஜக.வில் இணைந்தனர்.இதனால் கேரளாவில் பாஜக.வின் பலம் அதிகரிக்கும் என்று நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in