

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்றின் தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளதாவது:
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 15,510 பேரில் 87.25 சதவீதத்தினர் இந்த ஆறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
தினசரி பாதிப்பு அதிகரித்து வரும் மாநிலங்களுடனும், யூனியன் பிரதேசங்களுடனும் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
நாட்டில் தற்போது கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,68,627 ஆகப் பதிவாகியுள்ளது. இது நாட்டின் ஒட்டு மொத்த பாதிப்பில் 1.52 சதவீதமாகும். தற்போதைய பாதிப்புகளில் 84 சதவீதம், ஐந்து மாநிலங்களில் பதிவாகியுள்ளது.
இதுவரை, நாடு முழுவதும் 2,92,312 முகாம்களில் 1,43,01,266 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 66,69,985 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 24,56,191 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 51,75,090 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக 60 வயதை கடந்தோருக்கும், இதர உடல் உபாதைகள் உள்ள 45 வயதிற்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன.
நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,07,86,457 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 11,288 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 8,293 பேரும், கேரளாவில் 3,254 பேரும், பஞ்சாபில் 579 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 106 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்றின் தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் ஆகிய ஆறு மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.