இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கரோனா தடுப்பூசி செலுத்துங்கள்: மல்லிகார்ஜுன கார்கே கருத்து

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே : கோப்புப் படம்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே : கோப்புப் படம்.
Updated on
2 min read

நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கரோனா தடுப்பூசி போடுங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாட்டில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதையடுத்து, மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் இருப்பவர்களும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. 20 இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று காலை பிரதமர் மோடி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களுக்கு டெல்லியில் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''எனக்கு 70 வயதுக்கு மேலாகிறது. எனக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு பதிலாக இளைஞர்களுக்கு அதிகமான முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்த வேண்டும். நான் இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள்தான் உயிருடன் இருப்பேன். ஆனால், இளைஞர்கள் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும். நானும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறேன். ஆனால், முன்னுரிமையை இளைஞர்களுக்கு அளிக்க வேண்டும்" எனத் தெரிவத்தார்.

மீன்வளத்துறைக்குத் தனியாக அமைச்சகம் உருவாகக் கோரி ராகுல் காந்தி பேசியதை மத்திய அமைச்சர் அமித் ஷா கிண்டல் செய்தது குறித்து நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு மல்லிகார்ஜுன கார்கே பதில் அளிக்கையில், "நாட்டில் கடலோரப் பகுதிகளில் மட்டும் 100க்கும் மேற்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளும், மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. ஆதலால், மீன்வளம், மீனவர்கள் நலன் ஆகியவற்றுக்குத் தனியாக ஒரு அமைச்சகத்தை உருவாக்கவே ராகுல் காந்தி கூறினார்.

அந்த அமைச்சகம் சுயாட்சி பெற்றதாக இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் ராகுல் காந்தி தெரிவித்தார். ஆனால், மத்திய அரசோ, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையில் மீன்வளத்துறையையும் ஒரு துறையாகத்தான் சேர்த்துள்ளது. அமைச்சகமாக உருவாக்கவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மக்களைத் தவறாக வழிநடத்துகிறது. மீனவர்கள் கடலில் நீண்ட தொலைவு சென்று மீன் பிடிப்பதால், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்.

பாஜக பிரித்தாளும் அரசியலிலும், சாதி அரசியலையும் எடுத்து விளையாடுகிறது. பல மாநிலங்களில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கிறது''.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in