

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கு தேர்தல் பணியாற்ற தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஆலோசகராக நியமிக்கப்படுகிறார்.
பிஹாரின் பக்ஸர் மாவட்டம் அஹிரொலியைச் சேர்ந்தவர் ‘பி.கே’ என்றழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் பாண்டே. தொடக்கத்தில் வெளிநாட்டில் பணியாற்றி வந்த பிரசாந்த், குஜராத்வாசிகள் மூலமாக அம்மாநில முதல்வராக இருந்த மோடிக்கு அறிமுகமானார். இவரது திறமையை உணர்ந்த மோடி கடந்த 2012-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆலோசகராக பணியமர்த்தினார். கிஷோரின் பிரச்சார வியூகங்களால் மீண்டும் முதல்வர் ஆனார்.
அதன் பின்னர் ஐ-பேக் எனும் நிறுவனத்தை கிஷோர் தொடங்கினார். இந்நிறுவனம் சார்பில் நிதிஷ்குமார், பஞ்சாபில் அம்ரீந்தர் சிங், அர்விந்த் கேஜ்ரிவால், ஜெகன்மோகன்ரெட்டி ஆகியோருக்காக பேரவைத் தேர்தலில் ஆற்றியபணியிலும் வெற்றி கிடைத்தது.
இதனிடையே நிதிஷுடன் மிகவும் நெருக்கமான பிரசாந்த் கிஷோர், கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பரில் அவரது கட்சியின் துணைத் தலைவரானார்.
கடந்த ஆண்டு ஜனவரி 29-ல் நிதிஷால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் பிரசாந்த் கிஷோர். விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக நிபுணராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றி வருகிறார்.
தமிழகத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்காக பணியாற்ற பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் (I-PAC) நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. மக்களின் மனநிலை, எதிர்பார்ப்பு, வெற்றி வாய்ப்பு குறித்து தொகுதி வாரியாக ஐ-பேக் பணியாளர்கள் அறிந்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் பிரசாந்த கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்திற்கு அடுத்த வாய்ப்பும் கிடைத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், பஞ்சாப் முதல்வருமான அம்ரீந்தர் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘பஞ்சாப் மக்களுக்கு சரியான சேவையாற்றும் எங்கள் பணியில் எனது முதன்மை ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் இணைகிறார். இதனை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.’’ எனக் கூறியுள்ளார்.