

தேஜஸ்வி யாதவ் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தபோதே மம்தா பானர்ஜியுடன் பேசுகிறார், இனி அவருடன் எந்த பேச்சுமில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 3-வது முறையாக ஆட்சியைக் பிடிக்க திரிணமூல் காங்கிரஸ் போராடி வருகிறது. முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக காய்களை நகர்த்தி வருகிறது.
மற்றொரு புறம் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். மேற்குவங்க மாநிலத்தில் மிக முக்கிய முஸ்லிம் அமைப்பின் தலைவரான அப்பாஸ் சித்திக் தான் உருவாக்கியுள்ள இந்திய மதச்சார்பற்ற முன்னணி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என அறிவித்துள்ளார்.
காங்கிரஸ்- இடதுசாரி கூட்டணியில் இடம் பெற்று முஸ்லிம் மக்கள் கணிசமாக வசிக்கும் 30 தொகுதிகளில் போட்டியிட அப்பாஸ் சித்திக் திட்டமிட்டுள்ளார். இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கூறியதாவது
‘‘இடதுசாரி கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளது. இதுபோலவே சித்திக்கின் மதச்சார்பற்ற கூட்டணியையும் எங்கள் அணியில் இடம் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்கள் கூட்டணியில் சேருவதற்கு ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆர்வம் காட்டினார். அவருடன் நாங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். ஆனால் திடீரென அவர் மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளார். இனிமேல் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. எனவே தேஜஸ்வி யாதவுடன் இனி எந்த பேச்சுமில்லை.’’ எனக் கூறினார்.