

பெங்களூருவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா வீட்டில் கத்தியுடன் நுழைய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திங்கள் காலை லிங்கராஜு (54) என்ற நபர் மனு கொடுக்க வந்தார். அவரை பாதுகாப்புக் காவலர் சோதனை செய்த போது துருப்பிடித்த கத்தி ஒன்றை அவரிடமிருந்து பறிமுதல் செய்ய நேரிட்டது. இந்த சம்பவம் காலை 10 மணிக்கு நடந்துள்ளது.
வழக்கமாக சோதனையில் ஈடுபட்ட போது கத்தி வைத்திருந்தது தெரிய வந்ததால் அவரை உடனே கைது செய்தனர். பிறகு ஹை கிரவுண்ட் காவல் நிலையத்துக்கு லிங்கராஜு கொண்டு செல்லப்பட்டார்.
மைசூருவைச் சேர்ந்தவர் லிங்கராஜு என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
போலீஸ் விசாரணையின் போது தன்னை ஹெலிகாப்டர் ஒன்று முதல்வர் வீட்டில் இறக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். காவல்துறையினர் லிங்கராஜு குறித்த தகவல்களுக்காக மைசூரு போலீஸாருடன் தொடர்பு கொண்டுள்ளனர்.