

பிரதமர் மோடி இன்று காலை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது, மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தி, தடுப்பூசி குறித்த சந்தேகம், தயக்கத்தை மனதிலிருந்து நீக்கும் என்று எய்ம்ஸ் இயக்குநர் மருத்துவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் முடியும் தறுவாயில் இருப்பதையடுத்து, 2-வது கட்டமாக மார்ச் 1-ம் தேதி (இன்று) முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர், 59 வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
கரோனா தடுப்பூசி அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போடப்பட உள்ளது. இதில் அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசியை இலவசமாகப் போட்டுக் கொள்ளலாம். தனியார் மருத்துவமனையில் ரூ.250 செலுத்தி கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
கரோனா தடுப்பூசி போடும் 60 வயதுக்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். இணை நோய்கள் இருப்போர் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் ஒருவரிடம் தனக்கிருக்கும் இணை நோய்கள் குறித்த சான்றிதழ் பெற்றுவந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் மோடி, கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். பாரத் பயோடெக் மற்றும் ஐசிஎம்ஆர் இணைந்து தயாரித்த கோவாக்ஸின் தடுப்பூசியைப் பிரதமர் மோடி போட்டுக்கொண்டார்.
மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடும் திட்டத்தில் முதல் நபராக வந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து எய்ம்ஸ் இயக்குநர் மருத்துவர் குலேரியா கூறுகையில், "பிரதமர் மோடி இன்று காலை 6.30 மணிக்கு வந்து கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது மக்கள் மத்தியில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கரோனா தடுப்பூசி மீதான சந்தேகம், தயக்கத்தை மக்கள் மனதிலிருந்து போக்கும். மக்களுக்குப் பெரிய அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தி இனிமேல் அதிகமான மக்கள் தடுப்பூசி போட முன்வருவார்கள். தனியார் மற்றும் அரசு சார்பில் ஏராளமான தடுப்பூசி போடும் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருகிறார் என நேற்று இரவு தெரிவிக்கப்பட்டது. எந்தவிதமான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யவில்லை. முதல் நாளான இன்று அதிகாலையிலேயே வந்து பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
தடுப்பூசி போடும்போது செவிலியர்கள் பதற்றப்படாமல் இருப்பதற்காக பிரதமர் மோடி நகைச்சுவையாக அவர்களிடம் பேசினார். எங்கிருந்து வருகிறீர்கள், சொந்த ஊர் எது, எந்த மாநிலம் எனக் கேட்டு அவர்களைப் பதற்றப்படாமல் வைத்துள்ளார். பிரதமர் வருவது குறித்து செவிலியர்களுக்கு ஏதும் தெரிவிக்கவில்லை.
பிரதமர் வருகிறார் என்பதால், மற்ற நோயாளிகளுக்கு எந்தவிதமான தொந்தரவுகளையும், அசவுகரியக் குறைவையும் ஏற்படுத்தவில்லை. பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக் கொண்டதையடுத்து, இனிமேல் தகுதியான மக்கள் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டு, நாட்டிலிருந்து கரோனா வைரஸை விரட்டியடிக்க வேண்டும். பிரதமர் மோடிக்குப் புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் பி.நிவேதா தடுப்பூசி போட்டுவிட்டார்.
தடுப்பூசி போடப்பட்டபின் பிரதமர் மோடி 30 நிமிடங்கள் வரை கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இது வழக்கமான நடைமுறை. இந்த நடைமுறைக்குப் பின் பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார்" எனத் தெரிவித்தார்.