கோவாக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரதமர் மோடி; தற்சார்பு இந்தியாவுக்கு ஊக்கம்: பாரத் பயோடெக் நிறுவனம் பெருமிதம்
தற்சார்பு கொள்கையில் உறுதி கொண்ட பிரதமர் மோடி கோவாக்ஸின் தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்ட் என்ற கரோனா தடுப்பு மருந்தையும், ஐசிஎம்ஆர், புனேவில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்ஸின் எனும் தடுப்பு மருந்தையும் தயாரித்துள்ளன. இந்த இரண்டு தடுப்பு மருந்துகளும் இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் கோவாக்ஸின் தடுப்பூசி முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியில்லாமல் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டது. எனினும் கோவாக்சின் தடுப்பூசி குறித்து எதிர்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பின. அந்த தடுப்பூசியின் முழுமையான சோதனைகள் நடத்தி முடிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் இதனை கோவாக்ஸின் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்தது.
இந்தநிலையில் இரண்டாம் கட்டமாக இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 59 வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
இதில் நீரிழிவு நோய்கள், கடந்த ஓராண்டாக இதயக்கோளாறு நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் உள்ளிட்ட 20 இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி நாடுமுழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் தகுதி படைத்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இன்று காலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கரோனா தடுப்பூசி முதல் டோஸை பெற்றுக் கொண்டார். அவர் கோவாக்ஸின் தடுப்பூசியை பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது:
‘‘ஆத்மநிர்பார், இந்தியாவில் தயாரிப்போம் என்ற மத்திய அரசின் முழக்கத்தின்படி தயாரான கரோனா தடுப்பு மருந்து எங்களது நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பு மருந்து ஆகும். தற்சார்பு கொள்கையில் உறுதி கொண்ட பிரதமர் மோடி கோவாக்ஸின் தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கரோனா தொற்றுக்கு எதிராக போராடி வெற்றி காண்போம்.’’ எனத் தெரிவித்துள்ளது.
