

பள்ளிச் சிறுமியைப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய குற்றம் சாட்டப்பட்டவரிடம், நீங்கள் அச்சிறுமியைத் திருமணம் செய்து கொள்வீர்களா என்று உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் மின்துறையில் பணியில் இருப்பவர் மோஹித் சுபாஷ் சவான். இவர் பள்ளிச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மோஹித், கைது நடவடிக்கையைத் தவிர்க்க முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஏற்கெனவே விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால், மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டேவின் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ.பாலசுப்ரமணியன், போபண்ணா அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, “ஒரு பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீங்கள் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வீர்களா? அவ்வாறு என்றால் நாங்கள் உதவுகிறோம். இல்லை என்றால் நீங்கள் உங்கள் பணியை இழக்க நேரிடும். சிறையிலும் அடைக்கப்படுவீர். நாங்கள் உங்களைத் திருமணத்துக்குக் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், நாங்கள் உங்கள் பதிலைத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று நீதிபதிகள் அமர்வு கேட்டது.
இதற்கு மோஹித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அப்பெண் காவல் நிலையத்தை அணுகும்போதே திருமணம் தொடர்பாகப் பேசினோம். மனுதாரரும் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாகச் சம்மதித்தார். ஆனால், அப்பெண் அப்போது சம்மதிக்கவில்லை. மேலும், அப்பெண் 18 வயதைக் கடந்த பிறகுதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பெண் வீட்டார் கூறினார்கள். அப்பெண்ணுக்கு 18 வயதைக் கடந்த பிறகு திருமணம் செய்துகொள்ள மனுதாரர் சம்மதித்தார்.
ஆனால், அப்பெண் 18 வயதைக் கடந்த பிறகு மனுதாரர் பெண் வீட்டுக்குச் சென்று திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், பெண் வீட்டார் திருமணத்துக்குச் சம்மதிக்கவில்லை. இதனால் மனுதாரர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அதனால் தற்போது அப்பெண்ணைத் திருமணம் செய்ய முடியாது என்று மறுத்தார்.
ஆனால், பெண் கேட்டபோது திருமணம் செய்துகொடுக்க மறுத்த பெண் வீட்டார் தற்போது மனுதாரர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். மனுதாரர் அரசாங்க ஊழியர் என்பதால், அவர் கைது செய்யப்பட்டால் வேலை பறிபோகிவிடும்” என்று தெரிவித்தார்.
அதற்குத் தலைமை நீதிபதி பாப்டே, "அந்தச் சிறுமியை மயக்குவதற்கு முன்பும், பலாத்காரம் செய்வதற்கு முன்பும் இதைப் பற்றி நினைவில் வைத்திருக்க வேண்டும். அப்போது நீ அரசு ஊழியர் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டாமா" எனக் கேட்டார்.
அப்போது மனுதாரரின் வழக்கறிஞர், "இன்னும் மனுதாரர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே, "குற்றம் சாட்டப்பட்ட மனுதாரரை 4 வாரங்கள் கைது செய்யத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கிறோம். அதற்குள் முறைப்படி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளட்டும்" என உத்தரவிட்டார்.