மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகத் தேர்தல் நடத்த எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது குறித்து கடந்த வாரம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகத் தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

''மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் என்பது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14 (வாழும் உரிமை), பிரிவு 21 ஆகியவற்றுக்கு எதிராக இருக்கிறது. அதுமட்டுமல்லால் தேர்தல் பிரச்சாரத்தில் மதரீதியான கோஷங்கள் எழுப்புவதற்கும் சிபிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.

தேர்தலில் ஜெய் ஸ்ரீராம் எனும் மதரீதியான கோஷம் போடுவது சமூகத்தில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்துகிறது. தேர்தல் ஆதாயத்துக்காக ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பப்படுகிறதா, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறும் வகையில் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஆதலால், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்குத் தடை விதிக்க வேண்டும்''.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in