

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவருவதை நான் வரவேற்கிறேன் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசலை உயர்த்தி வருகின்றன. கடந்த மாதத்தின் இறுதியில் தொடர்ந்து 12 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைக் கடந்தது.
குறிப்பாக ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகர், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றில் பெட்ரோல் லிட்டர் 100 ரூபாய்க்கும் மேல் அதிகரித்ததது. டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.88க்கு மேல் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதையடுத்து, சரக்குப் போக்குவரத்துக் கட்டணமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதனால் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என ஏற்கெனவே ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸும் ஆலோசனை தெரிவித்திருந்தார்.
பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கடந்த வாரம் நிருபர்கள் கருத்து கேட்டபோது, "சங்கடமான நிலைதான். ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டுவருவதுதான் வழி" எனத் தெரிவித்திருந்தார்
இந்நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும், "பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிமுறைக்குள் கொண்டுவந்தால்தான் விலை குறையும்" எனத் தெரிவித்திருந்தார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தியும், கண்டன அறிக்கையும் வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியனிடம், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் கூறுகையில், "பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்கள் அனைத்தையும் ஜிஎஸ்டி வரிமுறைக்குள் கொண்டு வருவதற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். ஆனால், இந்த முடிவை நான் எடுக்க முடியாது. ஜிஎஸ்டி கவுன்சில்தான் எடுக்க வேண்டும். அவ்வாறு பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி முறைக்குள் கொண்டு வந்தால், அது சிறந்த முடிவாக இருக்கும். ஆனால், இந்த முடிவு ஜிஎஸ்டி கவுன்சில் கையில்தான் இருக்கிறது. தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை, உணவுப் பணவீக்கத்தில் கொண்டுவந்து நிறுத்திவிடும்" என்று கே.வி.சுப்பிரமணியன் தெரிவித்தார்.