Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM

திருமண தோஷங்களை நீக்குவதாக கூறியதால் மோசடி; கும்பலிடம் ரூ.97 லட்சத்தை பறிகொடுத்த 52 வயது நபர்: குஜராத் போலீஸ் விசாரணை

குஜராத் மாநிலம் வதோதராவின் புறநகர் பகுதியான சுபன்பூராவைச் சேர்ந்தவர் மதன் குமார். தொழிலாளர் நலத்துறையில் பணிபுரிந்து வரும் இவருக்கு, 52 வயதை கடந்தபோதிலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் பல ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்து வந்த அவர், திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்.

இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு திருமணத்துக்கு வரன் தேடும் மேட்ரிமொனியில் தனது பெயர் உள்ளிட்ட விவரங்களை மதன் குமார் பதிவு செய்தார். இந்த சூழலில், சில வாரங்கள் கழித்து அவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது எதிர்முனையில் பேசியவர், தன்னை அயோத்தி ராமஜென்மபூமியின் ஜோதிடர் என அறிமுகப்படுத்தி இருக்கிறார். பின்னர், மதன் குமாருக்கு பல தோஷங்கள் இருப்பதாக கூறிய அந்த நபர், அவற்றை கழித்துவிட்டால் 35 வயது பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய மதன்குமார், அந்த நபர் அவ்வப்போது கேட்டு வந்த பணத்தை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தி வந்துள்ளார்.

இதேபோல, மேலும் பல நபர்களும் மதன் குமாரிடம் ஜோதிடர்கள், ரிஷிகள் என அறிமுகமாகி பணத்தை பெற்று வந்துள்ளனர். இவ்வாறு கடந்த 3 ஆண்டுகளாக ரூ.97 லட்சத்தை அந்த நபர்களிடம் மதன் குமார் வழங்கி இருக்கிறார்.

இந்நிலையில், இத்தனை பரிகாரங்களை செய்தும் தனக்கு திருமணம் ஆகாததை எண்ணிப் பார்த்த அவர், ஒரு கும்பலால் தான் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கிறோம் என்பதை சமீபத்தில் உணர்ந்திருக்கிறார். இதையடுத்து, இந்த மோசடி விவகாரம் தொடர்பாக போலீஸில் மதன் குமார் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் வழக்கு செய்துள்ள போலீஸார், வங்கிக் கணக்குகளை வைத்து மதன் குமாரிடம் மோசடி செய்த நபர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x