

இந்திய-நேபாள எல்லை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பிஹாரைச் சேர்ந்த அசிஷ் குமார் ராம் என்ற இளைஞர் பலியானார்.
பலியான அசிஷ் குமார் ராம் (24) பிஹாரின் ராக்சால் பகுதியைச் சேர்ந்தவர். இவர் பலியானதை நேபாள நாட்டு உள்துறை செயலர் சூர்யா சில்வால் உறுதி செய்தார்.
இந்திய-நேபாள் எல்லை அருகே உள்ள சங்கராச்சாரியார் கேட் அருகே போலீஸ் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அசிஷ் குமார் ராம் பலியானார். இவர் தலையில் தோட்டாக்கள் பாய்ந்ததால் நாராயணி மருத்துவமனைக்கு எடுத்து வரும் வழியிலேயே உயிரிழந்தார்.
நேபாளத்தின் புதிய அரசியல் சாசனத்தை எதிர்த்து அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய எல்லை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் போலீஸ் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு போலீஸ் கண்ணீர்புகை வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் அடக்குமுறை கையாளப்பட்டது.
பாதுகாப்பு படையினர் ரப்பர் புல்லட்களை கொண்டு சுட்டதில் ஆர்பாட்டக்காரர்கள் பலர் காயமடைந்தனர். பிர்குஞ்ச்-ராக்ஸால் எல்லைப் பகுதியை ஆர்பாட்டக்காரர்கள் பிடித்ததாகவும், பிற்பாடு போலீஸ் அவர்களை விரட்டி விட்டதில் இந்தியாவையும் நேபாளத்தையும் இணைக்கும் பாலத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஓடி வந்தனர்.
எல்லையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதால், இந்தியாவிலிருந்து நேபாளுக்குச் செல்லும் அத்தியாவசியப் பொருட்கள் செல்ல வழியில்லாமல் நேபாளத்தில் பெட்ரோல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
நேபாளத்தின் தெற்குச் சமவெளியில் வெடித்த இந்தப் போராட்டத்தில் இதுவரை 50 பேர் பலியாகியிருப்பது கவனிக்கத்தக்கது.