

பெண்களுக்கு எதிரான குற்றங் களை தடுப்பதற்கான புதிய முயற்சி யாக, மாவட்டம்தோறும் மகளிர் சிறப்பு படை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான பணத்தை ‘நிர்பயா நிதி’யில் இருந்து செலவிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு படையில் பணி யாற்றுவற்கு முதல் முறையாக பொதுமக்களில் இருந்து பெண் கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆனால் இவர்களுக்கு காவல் துறையினருக்கான அதிகாரம் மற்றும் ஆயுதங்கள் எதுவும் தரப் படாது எனத் தெரியவந்துள்ளது. இதற்கு இணையாக வேறு எந்த விதமான அதிகாரம் அளிப்பது என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வரு கிறது. எனினும், இதற்கான ஆள் சேர்ப்பு அடுத்த மாதம் டிசம்பரில் தொடங்கவுள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “வன்கொடுமை உட்பட தங்களுக்கு எதிரான குற்றங் கள் மீது பெரும்பாலான பெண்கள் புகார் அளிக்க முன்வருவதில்லை. இதை தடுக்கும் வகையில் இந்த சிறப்பு படை அமையும்.பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது இந்த சிறப்பு படையினர் மாவட்டம் தோறும் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
மாவோயிஸ்ட்டுகளை அடக்கு வதற்காக சத்தீஸ்கரில் உருவாக்கப் பட்டு 2011-ல் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட ‘சல்வா ஜுடும்’ படையை போல, இந்த மகளிர் படை செயல்படும். இவர்கள் துவக்க கட்டமாக உ.பி., மேற்கு வங்கம், ம.பி. உட்பட சுமார் 20 மாநிலங்களில் செயல்பட உள்ள னர்” என்று தெரிவித்தனர்.
மகளிர் படையின் உறுப்பினர் கள், ஒவ்வொரு மாவட்ட காவல் துறை தலைமை கண்காணிப்பாள ரால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இதில் சேரு வதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி ப்ளஸ் 2 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இந்த சிறப்பு படைக்கு மதிப்பூதியம் அளிக்கவும், இதற்கான தொகையை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமைக்கப்பட்ட நிர்பயா நிதியில் இருந்து செலவிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011-ல் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பலாத் காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட் டார். அவரது நினைவாக ‘நிர்பயா நிதி’ என்ற பெயரில் ரூ.3,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கி இருந்தது. மகளிர் மற்றும் குழந்தை கள் நலத்துறை சார்பில் செலவிடப் படும் ‘நிர்பயா நிதி’யில் இந்த ஆண்டு, ரூ.23 கோடி மட்டுமே செல விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.