

வங்கிக் கணக்கில் பணம் இல்லை என காசோலைகள் திரும்பி வருவது அதிகரித்துள்ளதால் இது தொடர்பான வழக்குகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் கடந்த 2020 மார்ச்சில் தாமாக முன்வந்து எடுத்துக் கொண்டு ஒரு வழக்கில் ‘செக் பவுன்ஸ்’ வழக்குகளை விரைவாக முடித்து வைக்க வழிகாட்டுதலை வெளியிடுவது குறித்து ஆராய்ந்து வருகிறது.
இவ்வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ 2 மூத்த வழக்கறிஞர்களை நியமித்துள்ளது. இவர்கள் கடந்த அக்டோபரில் அளித்த அறிக்கையில், தேவையான அவசர வழிகாட்டுதல்களை குறிப்பிட்டுள்ளனர். இதில் மேற்கண்ட வழக்குகளுக்கு தனி நீதிமன்றங்கள் ஏற்படுத்தும் பரிந்துரையும் இடம்பெற்றுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு முன் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காசோலை மோசடி வழக்குகளுக்கென்றே தனி நீதிபதிகளுடன் கூடுதல் நீதிமன்றங்கள் ஏற்படுத்தும் எண்ணம் மத்திய அரசுக்கு உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கால அவகாசம் தேவை
சட்டங்களை சிறப்பாக நிர்வகிக்க கூடுதல் நீதிமன்றங்களை உருவாக்க நாடாளுமன்றத்துக்கு அரசியலமைப்பு சட்டத்தின்247-வது பிரிவு அனுமதி அளிக்கிறது. இந்நிலையில் இந்தஅதிகாரத்தை பயன்படுத்தி, கூடுதல் நீதிமன்றங்கள் ஏற்படுத்த மத்திய அரசுக்கு கால அவகாசம் தேவைப்படும் என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம்ஜீத் பானர்ஜி பதில் அளித்தார்.
மேலும் இது தொடர்பாக மத்திய அரசிடம் கலந்தாலோசித்து பதில் அளிப்பதாக அவர் கூறினார்.
இவ்வழக்கு மார்ச் 3-ம் தேதிமீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது கூடுதல் நீதிமன்றங்கள் தொடர்பாகவும் வழக்கறிஞர் குழுவின் பிற பரிந்துரைகள் குறித்தும் மத்திய அரசு தனது பதிலை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.