ஆன்லைனில் பாலியல் தொழில் புகார்: கேரள அன்பு முத்த போராளி பசுபாலன் கைது

ஆன்லைனில் பாலியல் தொழில் புகார்: கேரள அன்பு முத்த போராளி பசுபாலன் கைது

Published on

கேரளாவில் 'அன்பு முத்தம்' (கிஸ் ஆஃப் லவ்) என்ற பிரச்சாரத்தை தலைமையேற்று நடத்திய போராட்டக்காரர் ராகுல் பசுபாலனும் அவரது மனைவி ரேஷ்மி நாயரும் ஆன்லைனில் பாலியல் தொழில் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக மாநில குற்றப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சில மாதங்களுக்கு முன்னர், கலாச்சாரக் கண்காணிப்பு என்ற பெயரில் நடக்கும் செயற்பாடுகளைக் கண்டிக்கும் விதமாக இந்தியா முழுவதும் 'அன்பு முத்தம்' (கிஸ் ஆஃப் லவ்) என்ற போராட்டம் நடத்தப்பட்டது.

கேரளாவில் இப்போராட்டத்தை ராகுல் பசுபாலன் என்பவர் ஒருங்கிணைத்து நடத்தினார்.

இந்நிலையில், கடந்த மாதம் ஆபரேஷன் பிக் டாடி (Operation Big Daddy) என்ற பாலியல் குற்றத் தடுப்பு நடவடிக்கையை கேரள போலீஸார் துவங்கினர்.

குறிப்பாக, இணையதளம் மூலமாக பாலியல் தொழில் செய்யப்படுவது தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது போலீஸார் சிலரே தங்களை பணக்காரர்களைப் போல் அடையாளப்படுத்திக் கொண்டு, சில குறிப்பிட்ட அம்சங்களுடைய பெண்கள் தங்களுக்குத் தேவை எனப் பதிவு செய்தனர்.

போலீஸார் விரித்த வலையில் பல இடைத்தரகர்கள் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீஸார் அவர்கள் மூலம் இளம் பெண்களை மீட்டனர். அவ்வாறு மீட்கப்பட்டவர்கள் உளவியல் ஆலோசனைக்குப் பின்னர் குடும்பத்துடன் மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) இரவு பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு 4 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதற்காக அழைத்து வரப்பட்டிருப்பதாக போலீஸுக்கு தகவல் வந்தது.

அவர்கள் 4 பேரையும் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அதேபோல், ராகுல் பசுபாலனும், அவரது மனைவி ரேஷ்மி நாயரும் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்ற தகவலை போலீஸார் இன்னும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், ராகுல் கைது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளாகியது. கேரள மாநில அரசின் அடாவடிப் போக்கின் அடையாளமே இது என கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in