

உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் கட்சி பேதமின்றி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அங்கு பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்களாக உள்ள நிலையில், ஊதிய உயர்வுக்காக அவர்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 403 எம்.எல்.ஏ.க்களில் 271 பேர் கோடீஸ்வரர்கள். ஆளும் சமாஜ்வாதி கட்சியில் 140 பேர், பகுஜன் சமாஜ் கட்சியில் 63 பேர், காங்கிரஸில் 18 பேர், ராஷ்ட்ரிய லோக் தளத்தில் 7 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். எம்.எல்.ஏ.க்களில் பலர் சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ஊதிய உயர்வு கேட்டு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் குரல் கொடுத்தது, அவையில் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களை கூறிய எம்.எல்.ஏ.க்கள், தற்போது வழங்கப்படும் ஊதியத்தில் தங்களைச் சந்திக்க வருவோருக்கு காபி, டீ கூட வாங்கித் தர முடியவில்லை என்று ஆதங்கப்பட்டனர்.
ஆனால், ஊதிய உயர்வு விவகாரத்தில் அவசரம் காட்ட முதல்வர் அகிலேஷ் யாதவ் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக நிதித்துறையுடன் ஆலோசனை நடத்திய பிறகே முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் அலுவலக வட்டார அதிகாரிகள் தெரிவித்தனர்.