Published : 27 Feb 2021 04:59 PM
Last Updated : 27 Feb 2021 04:59 PM

காங்கிரஸ்- இடதுசாரி கூட்டணி கொல்கத்தாவில் நாளை பிரமாண்ட பேரணி: பங்கேற்காமல் தவிர்த்த ராகுல், பிரியங்கா

கொல்கத்தா 

மேற்குவங்க மாநிலத்தில் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ்- இடதுசாரி கட்சிகள் நாளை பிரமாண்ட பேரணி நடத்தவுள்ள நிலையில் அதில் பங்கேற்காமல் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் தவிர்த்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்துவது கடினம் என்பதால், 8 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

முதல் கட்டத் தேர்தல் மார்ச் 27-ம் தேதியும், 2-வது கட்டம் ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. 3-வது கட்டம் ஏப்ரல் 6-ம் தேதியும், 4-வது கட்டம் ஏப்ரல் 10-ம் தேதியும், 5-வது கட்டம் ஏப்ரல் 17-ம் தேதியும் நடைபெறும்.

6-வது கட்டத் தேர்தல் ஏப்ரல் 22-ம் தேதியும், 7-ம் கட்டத் தேர்தல் தேதி ஏப்ரல் 26-ம் தேதியும், 8-வது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதியும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் 3-வது முறையாக ஆட்சியைக் பிடிக்க திரிணமூல் காங்கிரஸ் போராடி வருகிறது. முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக காய்களை நகர்த்தி வருகிறது.

இரு கூட்டணிக்கும் மாற்றாக மற்றொரு புறம் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர்.
மேற்குவங்க மாநிலத்தில் மிக முக்கிய முஸ்லிம் அமைப்பின் தலைவரான அப்பாஸ் சிக்திக் தான் உருவாக்கியுள்ள இந்திய மதச்சார்பற்ற முன்னணி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என அறிவித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது.

காங்கிரஸ்- இடதுசாரிகள் இணைந்த மூன்றாவது அணி சார்பில் நாளை கொல்கத்தாவில் பிரமாண்ட தேர்தல் பிரச்சாரம் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரியும், காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரியும் பங்கேற்கின்றனர். அப்பாஸ் சிக்திக்கும் பங்கேற்று உரையாற்றுகிறார்.

இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி கலந்து கொள்ள வேண்டும் என மேற்குவங்க மாநில காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. அவர்களில் ஒருவர் கலந்து கொண்டால் மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கும் எனக் கருதி வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் இந்த அழைப்பை ஏற்க ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மறுத்து விட்டனர். கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு இடதுசாரி கட்சிகளும், காங்கிரஸும் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். ஆனால் மேற்குவங்கத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர்.

எனவே இந்த பேரணியில் இடதுசாரி தலைவர்களுடன் பங்கேற்றால் கேரளாவில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் ராகுல் காந்தியும் பிரியிங்கா காந்தியும் தவிர்த்து விட்டதாக தெரிகிறது. மேலும் தேசிய அளவில் மம்தா பானர்ஜியுடன் காங்கிரஸ் இணைந்து செயல்படும் நிலையில் அவருக்கு எதிரான பேரணியில் பங்கேற்பதால் தர்மசங்கடம் ஏற்படும் எனபதாலும் அவர்கள் பங்கேற்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x