

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துங்கள் என்று உற்பத்தியாளர்களுக்கு இந்திய பொம்மை கண்காட்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் முதல் இந்திய பொம்மை கண்காட்சியைக் காணொலி வாயிலாகப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சி இன்று (பிப்ரவரி 27) தொடங்கி மார்ச் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது
மின் வர்த்தக வசதியுடன் கூடிய இந்தக் காணொலிக் கண்காட்சியில் 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 1000 பேர் தங்கள் பொருட்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர். இதில் பாரம்பரிய இந்திய பொம்மைகளுடன் மின்சார பொம்மைகள், புதிர்கள், விளையாட்டுகள் போன்ற நவீன பொம்மைகளும் இடம்பெறும்.
பொம்மைகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் திறமை வாய்ந்த பிரபல இந்திய மற்றும் சர்வதேசப் பேச்சாளர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்குகளும், விவாத நிகழ்ச்சிகளும் இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெற உள்ளன.
இந்நிலையில் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பிரதமர் மோடி பேசும்போது, ''பொம்மைகள் உற்பத்தித் துறையில் நாமே சொந்தமாக பொம்மைகளை உருவாக்கி, தன்னிறைவு பெற வேண்டும். சர்வதேச பொம்மை சந்தையிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். 100 பில்லியன் டாலர்கள் கொண்ட சர்வதேச சந்தையில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவாகவே இருக்கிறது. நம் நாட்டில் விற்கும் பொம்மைகளில் 85 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்டவையே. இந்தியாவில் கைவினைக் கலைகளை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.
பொம்மை உற்பத்தியாளர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துங்கள். கவர்ச்சிகரமான, புத்தாக்க பொம்மைகளை, மறு சுழற்சி செய்ய முடியும் பொருட்களைக் கொண்டு உருவாக்குங்கள்.
இந்திய பொம்மைகள் சந்தை பாரம்பரியம், தொழில்நுட்பம், கருத்துருக்கள் மற்றும் திறமையைக் கொண்டது. நாம் உலகத்துக்கு சூழலுக்கு உகந்த பொம்மைகளை அளிக்க முடியும்'' என்று மோடி தெரிவித்தார்.