

கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்க விதிக்கப்பட்ட தடை மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தற்போதுதான் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு கோடியைக் கடந்தது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எட்டு லட்சத்தைக் கடந்தது. அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கரோனா தொற்று பெரும் அளவில் குறைக்கப்பட்டது.
இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
சிகிச்சை பெறுபவர்களில் 74 சதவீதத்துக்கும் அதிகமானோர், கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளனர். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில், தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதனால் மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதலான கண்காணிப்பு அறிவுறுத்தல்களை அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கரோனா பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் அமலில் உள்ள பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை 2021-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதேசமயம் நாட்டின் சில பகுதிகளில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டவுடன் பல நாடுகளுக்கு விமானங்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது. சரக்கு விமானங்களும், குறிப்பிட்ட சில வழிகளில் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்கவும் விமானங்கள் இயக்கப்பட்டன.
மேலும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறி கரோனா வைரஸ் காரணமாக பிரிட்டன் உட்பட சில நாடுகளுக்கு விமானங்கள் இயக்குவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்க விதிக்கப்பட்ட தடை மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் சரக்கு விமானங்களுக்கு தடையில்லை அதுபோலவே குறிப்பிட்ட சில வழிகளில் சூழலை பொறுத்து விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.