

தமிழகத்தின் காவிரி, குண்டாறு திட்டத்துக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள கர்நாடக அரசு, காவிரியிலிருந்து வரும் உபரி நிலை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க முடியாது, சட்டரீதியாகச் சந்திப்போம் என்று தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் அடிக்கல் நாட்டினார்.
காவிரியில் உபரியாக வெளியேறும் நீரைக் கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்குத் திருப்புவதன் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும்.
இந்நிலையில் தமிழகம் நிறைவேற்ற உள்ள காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய மறுநாளே கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அந்த மாநில முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, காவிரியின் உபரி நீரைப் பயன்படுத்தத் தமிழகத்தை அனுமதிக்க மாட்டோம். கர்நாடக நலன் காக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி, சட்டத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோர் உயர் அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள், நீர்வளத்துறை உயர் அதிகாரிகள், மாநிலத் தலைமை வழக்கறிஞர் உள்ளிட்டோருடன் தமிழகத்தின் நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்து பெங்களூருவில் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்குப் பின், சட்டத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்துக்குத் தமிழகம் அடிக்கல் நாட்டியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் காவிரியிலிருந்து வரும் 45 டிஎம்சி உபரி நீரைப் பயன்படுத்தத் தமிழகம் திட்டமிட்டுள்ளது. ஆனால், இது கர்நாடகத்தின் நலனுக்கு எதிரானது.
உபரி நீரை இருதரப்பு மாநிலங்களும் சட்டரீதியாகவோ, அதிகாரபூர்வமாகவோ பங்கீட்டுக் கொள்ளாத நிலையில் இந்த திட்டத்தைச் செயல்படுத்துவது சரியல்ல. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீட்டுச் சட்டத்துக்கும் எதிரானது.
நதிநீர் பங்கீட்டுச் சட்டத்தின்படி, உபரி நீரை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து தீர்ப்பாயம் முடிவு செய்ய வேண்டும். இந்த திட்டம் செயல்படுத்தினால் அது சட்டத்துக்கு எதிரானது, இந்தத் திட்டத்தைக் கர்நாடக அரசு கடுமையாக எதிர்க்கும்.
உபரி நீரை இரு மாநிலங்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது கொள்கை. ஆனால், தமிழக அரசு எதிராகச் செய்கிறது. உபரி நீரைத்தானே எடுக்கிறோம் என்கிறார்கள். தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து சட்டரீதியாகப் போராடுவோம், கடுமையாக எதிர்ப்போம்.
காவிரிப் படுகையில் கர்நாடக அரசு எழுப்பிய திட்டங்களுக்குத் தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. 300 முதல் 400 ஆண்டுகளான அணைகளை மராமத்துப் பணிகள் பார்க்கக்கூட எதிர்ப்பு தெரிவித்தது. பெங்களுரு நகருக்குக் குடிநீர் தேவைக்காக அணை கட்ட முயன்றபோது அதற்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது".
இவ்வாறு சட்டத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை குறிப்பிட்டார்.
கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி கூறுகையில், "தமிழக அரசின் நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு எதிராக சட்டரீதியாகப் போராடுவது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. சட்டரீதியான போராட்டம் நடத்துவதில் எந்தத் தாமதமும் இருக்காது.
தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கிறது என்பதால் நாங்கள் நடவடிக்கை எடுக்கமாட்டோம் எனும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறேன். மாநிலத்தின் நலன்தான் முக்கியம்" எனத் தெரிவித்தார்.