

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த வைர வியாபாரி நிரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதற்கு பிரிட்டன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, நிரவ் மோடியை அடைப்பதற்காக மும்பை ஆர்தர் சாலை சிறையில் சிறப்பு அறை தயாராகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்ற வைர வியாபாரி நிரவ் மோடி, கடந்த 2018-ம் ஆண்டு லாவோஸ் மாநாட்டுக்காகச் சென்றவர் நாடு திரும்பவில்லை. இதையடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரில் சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தின. நிரவ் மோடிக்குச் சொந்தமான கோடிக்கணக்கான சொத்துகள், வங்கி டெபாசிட்டுகள் முடக்கப்பட்டன.
லண்டனில் நிரவ் மோடி வசித்து வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை லண்டன் போலீஸார் உதவியுடன் 2019-ம் ஆண்டு, மார்ச் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். நிரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பாக, வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாவட்ட நீதிபதி சாம் கூஸ் நேற்று தீர்ப்பளித்தார். அதில், "நிரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதில் எந்தத் தடையும் இல்லை. இந்தியாவில் மனித உரிமை மீறலோ, மனநலம் பாதிக்கப்படும் என்ற வாதத்தையோ ஏற்க முடியாது" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, நிரவ் மோடியை இந்தியா அழைத்து வரும் பணிகள் தொடங்கியுள்ளன. நிரவ் மோடியை இந்தியா அழைத்துவரும்போது அவரை மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அங்கு சிறப்பு அறையும் தயாராகி வருகிறது
இது தொடர்பாகச் சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "நிரவ் மோடி மும்பைக்கு அழைத்து வரப்பட்டவுடன், ஆர்தர் சாலை சிறையில்தான் அடைக்கப்படுவார். இதற்காக அதிக பாதுகாப்பு அம்சம் கொண்ட 12-ம் எண் வளாகத்தில் 3 அறைகள் தயாராகி வருகின்றன.
இந்த அறைகள் அதிக பாதுகாப்பு கொண்டவை. இந்தச் சிறையை தயார்படுத்தும் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. நிரவ் மோடி இந்தியா வருவதற்குள் சிறை முழுமையாகத் தயாராகிவிடும். நிரவ் மோடி 12-ம் எண் வளாகச் சிறையில் அடைக்கப்பட்டால், அவருக்கு 3 சதுர மீட்டர் அளவுக்குச் சிறை ஒதுக்கப்படும். அவருக்குத் தரைவிரிப்பு, தலையணை, போர்வை, படுக்கை விரிப்பு ஆகியவை வழங்கப்படும். இந்த அறையில் காற்றோட்டம், மின்விளக்கு வசதி, தனிப்பட்ட பொருட்களை வைக்கும் வசதிகளும் உள்ளன" எனத் தெரிவித்தார்
ஆர்தர் சாலை சிறை குறித்தும், சிறையில் உள்ள வசதிகள், அந்தச் சிறையில் இருக்கும் மற்ற கைதிகள் நிலவரம் குறித்தும் ஏற்கெனவே 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசுக்குத் தகவல் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.