

‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரன் நேற்று (வியாழன்) இரவு முறைப்படி பாஜகவில் இணைந்தார். கடந்த வாரம், பாஜகவில் இணைவது பற்றிய தனது முடிவை அறிவித்தார். பாஜக சீட் வழங்கினால் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் கட்சியில் முறைப்படி கட்சியில் இணைந்தார்.
கேரளாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக விஜய் யாத்திரா நடைபெறுகிறது.
கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரன் தலைமையில் நடந்த விஜய் யாத்திரை நேற்றிரவு சங்கரம்குளம் பகுதியை வந்தடைந்தது. அப்போது அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் முறைப்படி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் ஸ்ரீதரன்.
பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜகவினர் ஸ்ரீதரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேடையில் அவருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் பேசிய ஸ்ரீதரன், தன் வாழ்வில் இதுவே மிகப்பெரிய தருணம் என்றார். பாஜகவில் இணைந்து மக்கள் சேவையாற்ற வாய்ப்பளித்த பாஜகவுக்கு நன்றி தெரிவித்தார். கேரள பாஜக தலைவர் சுரேந்திரனுக்கும் நன்றி தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்னர் தான் பாஜகவில் இணைவது ஏன் என பேட்டியளித்த ஸ்ரீதரன், "கேரள மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்களை காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கூட்டணி செய்யவில்லை. கேரளாவுக்கு வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவே பாஜகவில் இணைவுள்ளேன். இதுமட்டுமே எனது நோக்கம். கட்சி விரும்பினால் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன்" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த மெட்ரோ மேன்?
தலைநகர் டெல்லியில் முதன்முறையாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தி பெரும் புகழ் பெற்றவர் ஸ்ரீதரன். இதுமட்டுமின்றி, கொல்கத்தா, கொச்சி உள்ளிட்ட மெட்ரோ ரயில் திட்டங்களின் நிர்வாகியாகவும் இருந்தார். இதனால் அவர் ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரன் என்றே அழைக்கப்பட்டார். ஸ்ரீதரனுக்கு தற்போது 88 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.