

பெட்ரோல் மற்றும் டீசல் மீதானவரியைக் குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் தனித்தனியாக பெட்ரோல், டீசலுக்கு வரி விதித்துள்ளன. எனவே அவ்விரு தரப்புகள் இணைந்து வரி குறைப்புக்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
'மத்திய, மாநில அரசுகள் அதன் வருவாயை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. கரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிப்பதற்கு அதிகம் செலவிட வேண்டிய சூழலில் அவை உள்ளன. இந்த நெருக்கடி புரிந்துகொள்ளத்தக்கது. அதேசமயம் பணவீக்கம் பற்றி அவை கருத்தில் கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உற்பத்தி மற்றும் தயாரிப்பு விலை உயரும்’ என்று அவர் கூறினார்.
பெட்ரோல் விலை ரூ.90 க்கு மேலாகவும், டீசல் விலை ரூ.80-க்கு மேலாகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்என்று எதிர்க்கட்சிகளும் மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் தந்த வண்ணம் உள்ளன. ‘பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பது எண்ணெய் நிறுவனங்கள்தான். அரசின் கையில் எதுவுமில்லை’ என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் கூறினார். சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிப்பது குறிப்பிடத்தக்கது.