Last Updated : 20 Nov, 2015 09:12 AM

 

Published : 20 Nov 2015 09:12 AM
Last Updated : 20 Nov 2015 09:12 AM

தமிழக வெள்ள பாதிப்பின் தாக்கம்: மழைநீர் வடிகால் கட்ட மத்திய அரசிடம் நிதி கேட்கும் மாநிலங்கள்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை கண்டு அச்சம் அடைந் துள்ள சில மாநிலங்கள் தங்கள் நகர்ப்புறங்களில் மழைநீர் வடிகால் கட்ட முடிவு செய்துள்ளன. இதற் காக ‘அம்ருத்’ திட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் நிதி கோரியுள்ளன.

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை தொடர்ந்து, ‘அம்ருத்’ திட்டத்தை மத்திய அரசு கடந்த பிப்ரவரி பட்ஜெட்டில் அறிவித்தது. இதன் கீழ் நாடு முழுவதும் 500 நகரங்கள் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரை கொண்டுள்ள இந்த நகர மேம்பாட்டு திட்டம் (Atal Mission for Rejuvenation and Urban Transformation), சுருக்கமாக அம்ருத் (AMRUT) என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் 25-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடியாகும்.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த தீபாவளிக்கு முன் தொடங்கிய பலத்த மழை காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் உயிரிழப்பு, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சில மாநிலங்கள் தங்கள் பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படும் நகரங்களில் மழைநீர் வடிகால் கட்ட முடிவு செய்துள்ளன. இதற்காக அம்ருத் சார்பில் தங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்திக்கொள்ள மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்திடம் அனுமதி கேட்டுள்ளன. இது தொடர்பாக கேரளா, ஒடிசா, குஜராத், மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநிலங்கள் கடிதம் அனுப்பியுள்ளன.

இதுகுறித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த 5 மாநிலங்களிலும் மொத்தம் 85 நகரங்கள் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 25 நகரங்களில் அம்ருத் 2015-16-ம் ஆண்டுக்கான நிதியில் மழைநீர் வடிகால் கட்ட அனுமதி கோரியுள்ளன. இவை எங்கள் துறையின் மேற்பார்வையில் கட்டப்படும் எனவும், மீதம் உள்ள 60 நகரங்களில் வரும் ஆண்டுகளின் நிதியில் கட்டவும் யோசனை கூறியுள்ளன” என்றார்.

அம்ருத் திட்ட நிதியில் ரூ.105 கோடி கோரும் கேரள அரசு, கொச்சி (ரூ 24 கோடி), திருவனந்தபுரம் (ரூ.18 கோடி), திருச்சூர் (ரூ. 15 கோடி), குருவாயூர் (ரூ. 13 கோடி), கண்ணூர் (ரூ.11 கோடி), பாலக்காடு (ரூ.9 கோடி), கோழிக்கோடு (ரூ. 7 கோடி), ஆலப்புழை (ரூ. 6 கோடி), கொல்லம் (ரூ. 2 கோடி) ஆகிய நகரங்களுக்கு இந்த நிதியை கேட்டுள்ளது.

குஜராத்தில் புஜ், வதேரா ஆகிய நகரங்களுக்காக அம்மாநில அரசு ரூ. 39 கோடி கோரியுள்ளது. இதுபோல் ஒடிசா (ரூ.15 கோடி), ம.பி. (ரூ.36 கோடி), மிசோரம் (ரூ. 47 கோடி) ஆகிய மாநிலங்களும் நிதி கேட்டுள்ளன.

இவற்றுக்கு அனுமதி அளிப்ப தில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையும் சாதகமான ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அனுமதியை தொடர்ந்து, நாட்டின் மற்ற மாநிலங்களும் மழைநீர் வடிகால் கட்ட அம்ருத் திட்ட நிதியை மத்திய அரசிடம் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x