

டெல்லியில் வரும் மார்ச் மாதம்முதல் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிக்கையை ஆளும் ஆம்ஆத்மி அரசு நேற்று வெளியிட்டது.
டெல்லியில் சுமார் 17 லட்சம் குடும்பத்தினர் ரேஷன் உணவுப் பொருட்கள் பயனாளிகளாக உள்ளனர். இவர்களுக்கு, கரோனா பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்குகாலத்தில் வீடுகளுக்கே சென்றுரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. இதனால், பொதுமக்களின் பாராட்டை பெற்ற டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், இத்திட்டத்தை நிரந்தரமாக செயல்படுத்த முடிவு செய்தார். இந்நிலையில், இது தொடர்பாக ‘முக்கிய மந்திரி கர் கர் ரேஷன் யோஜ்னா' (முதல்வரின் வீடுதோறும் ரேஷன் வழங்கும் திட்டம்) எனும் பெயரில் நேற்று ஒரு அறிவிக்கையை டெல்லி அரசு வெளியிட்டது.
இதில், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் 2013-ன்படி, பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்,மானிய விலையில் வழங்கப்படும் கோதுமை மாவு மற்றும் அரிசியை பாலிதீன் பைகளில் நிரப்பும் செலவை பொதுமக்கள் ஏற்க வேண்டும். கோதுமையை மத்திய அரசின் உணவு கிடங்குகளில் இருந்து எடுத்து, மாவாக அரைத்து, பேக்கிங்செய்து, வீடுகளில் விநியோகிப்பது வரையிலான அனைத்து நடவடிக்கையும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்படுகிறது. இப்பணியின் முழுப்பொறுப்பு, டெல்லி மாநில உணவு விநியோக கழகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் முறைகேடு நடப்பதைத் தடுக்க பயோமெட்ரிக் முறையில்விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் அனைத்துக்கும் ஜிபிஎஸ் முறையில் கண்காணிக்கும் வசதியும் செய்யப்பட உள்ளன.
இதுபோல, பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று அரசு சேவைகளை செய்வதும் ஆம் ஆத்மிஅரசின் கொள்கையாக உள்ளது. இதற்கு முன்பு ஓட்டுநர் உரிமம், குடியிருப்பு மற்றும் சாதிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட 100 வகையான அரசு சேவைகள் கடந்த ஜுலை 2018-ல்அறிமுகப்படுத்தி படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது. இந்தசேவைகளின் மூலம் பொதுமக்களின் நேரமும் பயணச்செலவும் மிச்சமாவதால், ஆம் ஆத்மி அரசுக்கு பயனாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.