

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் நேற்று ஆயிரக்கணக்கான அதிருப்தி யாளர்கள் கூடியதால் பதற்றம் ஏற்பட்டது.
தீபாவளியை ஒட்டி பொற்கோயி லின் தலைமை குரு பக்தர்கள் மத்தியில் ஆன்மிக உரையாற்றுவது வழக்கம். அதன்படி தற்போதைய தலைமை குரு ஜாதேதர் கியானி குர்பஞ்சான் சிங் நேற்று பொற்கோயிலில் உரையாற்றினார்.
அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான அதிருப்தியாளர்கள் பொற்கோயிலின் முன்பு திரண்டு கருப்புக் கொடி காட்டினர். ஜாதேதர் கியானிக்குப் பதிலாக தாங்கள் நியமித்த கியானி தயான் சிங் மண்டே தலைமை குருவாக செயல்பட வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.
இதனால் பொற்கோயிலில் பதற்றம் ஏற்பட்டது. பிரார்த்தனைக் காக வந்திருந்த பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கோயிலில் இருந்து உடனடியாக வெளியேறினர்.
சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீ ஸாரால் ஆர்ப்பாட்டக்காரர்களை சமாளிக்க முடியவில்லை, உடனடியாக கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டன. அதிருப்தி பிரிவின் மூத்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். போலீஸாரின் சமரசத்தின்பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்த தீபாவளி கருப்பு தீபா வளியாக அனுசரிக்கப்படுகிறது என்று அதிருப்தி பிரிவு தலைவர்கள் அறிவித்துள்ளனர்.