

பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்துக்கு பாஜக தயாராகி வரும் போது, அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பிரதமர் மோடியைச் சந்தித்து பிஹார் தேர்தல் பிரச்சாரத்துக்கு அவரது வரவை உறுதி செய்தனர்.
மேலும், பிஹார் தேர்தலில் பாஜக தனது முதல்வர் வேட்பாளரை அறிவிக்காத நிலையில் பிரதமர் மோடியை நம்பியே பிரச்சார வலைப் பின்னப்பட்டது. ஆனால் மோடி அளவுக்கதிகமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு அம்பலப்பட்டுப் போனார். ஒரு மாநில முதல்வரை வீழ்த்த ஒரு பிரதமர் இவ்வளவு போராடியது இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக இருக்கலாம்.
ஆனால்... மோடியின் புகழ் மங்கவில்லை என்கிறது பாஜக வட்டாரங்கள்:
பாஜக அலுவலகத்தின் பெயர் கூற விரும்பாத சில நிர்வாகிகள் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு கூறும்போது, பிரதமரின் புகழுக்கு இந்த தேர்தல் களங்கம் ஏற்படுத்தவில்லை என்றாலும், ‘அவரை ஒரு பிரச்சார பீரங்கியாக அளவுக்கதிகமாக பயன்படுத்தியிருக்கக் கூடாது. பிரதமர் மோடி, மன்மோகன் சிங் போல் அல்லாமல் ஒரு அரசியல் தலைவர் ஆனால் இனி ‘மோடியை வைத்து பெரிய பிரச்சாரக் கூட்டம் வேறொன்றும் இல்லை’ என்ற உத்தியிலிருந்து நகர்வது அவசியம் என்று கருதுகின்றனர்.
மொத்தத்தில் பிஹார் தேர்தலுக்காக 31 பெரிய தேர்தல் கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் ஒரே வாரத்தில் 17 பிரச்சாரக்கூட்டங்களில் பேசியுள்ளார்.
ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும் அவர் புதிதாக ஒன்றைக் கூறுவார், ஆனால் அதனை நிதிஷ் குமார் பிரச்சார அணி வெகு எளிதில் எதிர்கொண்டது.
கயாவில் மகாகூட்டணியின் டி.என்.ஏ. பற்றி பேசினார். இதனையடுத்து பிஹாரிகளா, அன்னியரா (பிஹாரி/பஹாரி பிரச்சாரம்) என்பதை நிதிஷ் அணி முன்வைத்தனர்.
ஆகஸ்ட் 18-ம் தேதி அறிவித்த 1.25 லட்சம் கோடி சிறப்பு நிவாரணம் அறிவித்தா மோடி. ஆனால் மிகப்பெரிய உறுதி மொழிகளைக் கொண்டு மக்களை முட்டாளாக்க முயற்சி என்று இது எதிர்கொள்ளப்பட்டது.
பிரதமர் மோடி பயங்கரமாகப் பேசி வாக்குறுதி வழங்கும் தந்திரக்காரர் என்று நிதிஷ் அணி மோடியை பற்றி ஒரு சித்திரத்தை மக்களிடையே ஏற்படுத்தி நிதி உதவி வாக்குறுதி பற்றிய ஐயத்தை ஏற்படுத்தியது.
பிஹார் தேர்தல் முடிவு கட்டங்களில் மோடி பிரச்சாரம் மேற்கொள்ளும்போது, மகாக்கூட்டணி தலைவர்கள் மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்வர், ஒரே ஒரு பிரிவினரை மட்டுமே இவர்கள் ஆதரிப்பர் என்றார்.
பிறகு பாஜக தோற்றால் பாகிஸ்தானில் வெடிவெடித்துக் கொண்டாடுவார்கள் என்று அமித் ஷா பேசினார், இவையிரண்டும் எல்லை மீறிய கூற்றுகளாக உணரப்பட்டது.
தேர்தல்களில் மல்லுக்கட்டு பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தவிர்த்து சட்டமன்ற தேர்தல்களில் ஒரு பிரதமராக களத்துக்கு அப்பாற்பட்டு செயல்பட முடிவெடுத்தால் இத்தகைய ‘அடி’களிலிருந்து அவர் எதிர்காலத்தில் தப்பிக்கலாம் என்று அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
பஞ்சாபில் அமரிந்தர் சிங்கையும், அசாமில் தருண் கோகயையும் பாஜக எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில் பிஹார் தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு ஒரு பாடமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.