

சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், ஓடிடி தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள மத்திய அரசு, சர்ச்சைக்குரிய கருத்துக்களை சுட்டிக்காட்டினால், அதை 36 மணிநேரத்துக்குள்ளாக நீக்க வேண்டும், அதிகாரியுடன் கூடிய குறைதீர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை, ட்விட்டர், வாட்ஸ்அப் போன்றவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தேசவிரோதமான கருத்துக்கள், நாட்டின் இறையான்மைக்கு விரோதமான மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் கருதுக்கள் உண்மையில் எங்கிருந்து உருவானது, யாரால் உருவாக்கப்பட்டது என்பதை கண்டுபிடித்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் ஊடகங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் தொடர்பாக பலரும் ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தனர். இது விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக 1500 ட்விட்டர் கணக்குகளை முடக்க ட்விட்டர் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
இதில் ட்விட்டர் நிறுவனத்துக்கும், அரசுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இந்தி சட்டங்களுக்கு கட்டுப்படாவிட்டால் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அரசு எச்சரித்ததையடுத்து, ட்விட்டர் நிறுவனம் பணிந்தது. இந்த சம்பவத்துக்குப்பின் இந்த வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.
மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர். அவர் கூறியதாவது:
சமூக வலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்துவதும், போலியான செய்திகளை வெளியிடுவது பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சமூக வலைத்தள நிறுவனங்கள் தொழில் செய்ய வரவேற்கப்படுகின்றன, இந்தியர்களுக்கு அதிகாரம் அளிப்பதும் வரவேற்கப்படுகிறது.
விமர்சனங்களையும், எதிர்ப்புகளும் மத்திய அரசு வரவேற்கிறது. ஆனால், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோருக்கு தங்கள் குறைகளைத் தெரிவிக்கவும், குறிப்பிட்ட காலக்கத்துக்குள் தீர்வு வழங்கக்கூடிய குறை தீர்வு அதிகாரி, தகவல்தொடர்பு அதிகாரியுடன் ஓர் அமைப்பை சமூக வலைத்தளங்கள் உருவாக்க வேண்டும். இந்த 3 அதிகாரிகளும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
சமூக வலைத்தள நிறுவனங்கள் மாதந்தோறும் பெற்ற புகார்கள் எண்ணிக்கை, எத்தனை புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, நீக்கப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
நாட்டின் இறையான்மைக்கு விரோதமாகவும், பாதுகாப்புக்கு எதிராகவும், பொது அமைதிக்கு எதிராகவும் இருக்கக்கூடிய கருத்துக்கள் இருந்தால், அந்த கருத்துக்கள் உண்மையாகவே எங்கிருந்து, யாரால் உருவாக்கப்பட்டது என்பதை ட்விட்டர், வாட்ஸ்அப் நிறுவனங்கள் அறிய வேண்டும். தேவைப்பட்டால் மத்திய அரசிடம் 72 மணிநேரத்துக்குள் பகிர வேண்டும், 36 மணிநேர்துக்குள் நீக்க வேண்டும்.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்கும் முன் பயனாளிகளுக்குத் தெரிவித்து, அவர்களின் விளக்கத்தை கேட்க வேண்டும். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவி்த்தார்
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில் " ஓடிடி தளங்களா அமேசான், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றில் பல்வேறு வயதுள்ள வாடிக்கையாளர்களை மனதில் வைத்து வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி ஓடிடி தளங்கள் தங்கள் நிகழ்ச்சிகளை 5 பிரிவுகளாக பிரிக்க வேண்டும். அனைவரும் பார்க்ககூடிய நிகழ்ச்சிகள், 7 வயதுக்குள்ளானவர்கள், 13 வயதுக்கு மேலானவர்கள், 16 வயதுக்குள்ளானவர்கள், பதின்பருவத்தினர்(ஏ) என பிரிக்க வேண்டும்.
குறைதீர்வு அமைப்பு உருவாக்குதல் முறை என்பது ஓடிடி தளங்கள், டிஜிட்டல் ஊடகங்கள், செய்தி ஊடகங்களுக்கும் பொருந்தும். டிஜி்ட்டல் ஊடகங்கள், தளங்கள், வதந்திகளைப் பரப்ப உரிமைஇல்லை. ஊடக சுதந்திரம் என்பது நியாயமான கட்டுப்பாடுகளுடன் முழுமையாக வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.