ஒருபுறம் சீன முதலீட்டுக்கு சிவப்புக் கம்பளம்; மறுபுறம் ஆப்ஸுக்குத் தடையா? மத்திய அரசைச் சாடிய சிவசேனா

சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே : கோப்புப்படம்
சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே : கோப்புப்படம்
Updated on
2 min read

ஒருபுறம் சீன முதலீட்டுக்கு சிவப்புக் கம்பளத்தை விரித்துவிட்டு, மறுபுறம் சீனப் பொருட்களுக்கும், செயலிகளுக்கும் தடை விதிப்பதா என்று மத்திய அரசை சிவசேனா கட்சி சாடியுள்ளது.

சீனா எப்போதும் நம்பகத்தன்மை இல்லாத நாடு. உண்மைத் தன்மை இல்லாத நாடு என்பதை மறந்துவிடக் கூடாது என்று சிவசேனா கட்சி எச்சரித்துள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில், சீனாவுக்கான முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதியளிக்கப் பரிசீலித்து வருவது தொடர்பானது குறித்து தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

''இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே எல்லையில் ஏற்பட்ட பதற்றம் கடந்த வாரம் தணிந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகரீதியான உறவில் ஏற்பட்ட பதற்றமும் தணிந்துவிட்டதாகவே பார்க்கிறோம். அதனால்தான், 45 சீன நிறுவனங்களுக்கு முதலீடு தொடர்பான அனுமதியை வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

கரோனா வைரஸ் பரவலுக்குப் பின் மோடி அரசு, சீன நிறுவனங்களுக்கு எதிராகக் கடினமான நிலைப்பாட்டை எடுத்தது, இப்போது தளர்த்தி வருகிறது. சூழலுக்கு ஏற்றாற்போல், மற்ற நாடுகளுடனான அரசியல் மற்றும் ராஜாங்கரீதியான உறவுகள் மாறிக்கொண்டே இருக்கலாம்.

ஆனால், சீனாவுடன் எல்லையில் ஏற்பட்ட பதற்றம் தணிந்தவுடன், மத்திய அரசு சீன வர்த்தகத்துக்கு பச்சைக் கொடி காட்ட முயல்வது என்பது தற்செயலாக நிகழ்வதா?

கடந்த 8 மாதங்களாக எல்லையில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பின், கடந்த வாரம்தான் பதற்றமும் தணிந்துள்ளது. ஆனால், இந்தப் பதற்றம் தணிந்தவுடனே சீனாவுடன் வர்த்தகத்துக்கான அனுமதி குறித்து பரிசீலனையை மத்திய அரசு செய்து வருகிறது.

நம்பிக்கையில்லா, உண்மைத் தன்மை இல்லாத அண்டை நாடு சீனா. தனது வர்த்தகத்துக்காக எல்லைப் பிரச்சினையில் மெலிதான போக்கைக் கடைப்பிடித்து தனது நோக்கம் நிறைவேறியதும், மீண்டும் இந்தியாவுக்குத் தொந்தரவு கொடுக்கும் செயல்களில் சீனா ஈடுபடும்.

கடந்த ஆண்டு மத்திய அரசு டிக் டாக் உள்ளிட்ட 59க்கும் மேற்பட்ட சீன செயலிகளைத் தடை செய்தது. சீனாவுடன் மேற்கொண்ட பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன, இந்தியாவில் சீன நிறுவனங்கள் முதலீட்டுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆத்ம நிர்பார் பாரத் பிரச்சாரம் வலுப்பெற்று, தேசியவாதம் ஊக்குவிக்கப்பட்டது.

சீனாவை எவ்வாறு தடுத்தோம் என மோடி அரசு பெருமை அடித்துக்கொண்டது. ஆனால், 8 மாதங்களாக என்ன நடந்தது என்பதை மறந்துவிட்டு, 45 சீன நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப் போகிறார்களா?

மத்திய வர்த்தகம் தொழில்துறையின் புள்ளிவிவரங்கள்படி, கடந்த 2020-ம் ஆண்டில் இந்தியாவுடன் அதிகமான வர்த்தகம் செய்த நாடாக சீனாதான் முதலிடத்தில் இருந்திருக்கிறது.

மத்திய அரசின் புள்ளிவிவரங்களையடுத்து, தேசியவாதம் எனும் காற்று அடைக்கப்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டு, சீனப் பொருட்களுக்கும், செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு, உள்நாட்டுப் பொருட்களுக்கு ஆதரவு கோரப்பட்டது வெளிப்பட்டுவிட்டது.

எல்லையிலிருந்து சீன ராணுவம் திரும்பிச் சென்றவுடன், இந்தியாவில் வர்த்தகம் செய்ய சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க ஆயத்தமாகிறது மத்திய அரசு. சீனா எப்போதுமே நம்பக்கத்தன்மை இல்லாத கூட்டாளி என்பதை மறந்துவிடக் கூடாது''.

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in