

மேற்குவங்க தேர்தலையொட்டி கொல்கத்தாவில் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. ஒவைசியை பார்த்து மம்தா பானர்ஜி பயப்படுவுதாக அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் 3-வது முறையாக ஆட்சியைக் பிடிக்க திரிணமூல் காங்கிரஸ் போராடி வருகிறது. முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக காய்களை நகர்த்தி வருகிறது.
மற்றொரு புறம் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். பிஹார் சட்டப்பேரவையில் நடந்த தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சி மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட முயன்று வருகிறது.
இதனால் மேற்கு வங்கத்தில் நாள்தோறும் கட்சித் தலைவர்களுக்கு இடையே பரபரப்பான வாதங்கள், அறிக்கைகள் அனல் பறக்க வெளியாகி வருகின்றன.
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பேசும்போது, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியை பாஜகவின் பி டீம் என்றும், பணம் பெற்றுக்கொண்டு வாக்குகளைப் பிரிக்கப் பார்க்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலடி கொடுத்த அசாதுதீன் ஒவைசி பணத்தால் ஒவைசியை வாங்குவதற்கு யாரும் இல்லை, மம்தாவின் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும் பாஜக பக்கம் போய்ச் சேரும்போது அவர் அதை நினைத்து வருத்தப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்தநிலையில் அசாதுதீன் ஒவைசி இன்று மேற்குவங்க மாநிலத்தில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். கொல்கத்தாவில் பல இடங்களில் மக்களிடம் பேசி ஆதரவு திரட்ட ஏற்பாடு நடைபெற்றது. பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி கொல்கத்தா காவல்துறையினரிடம் மனு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஏஐஎம்ஐஎம் கட்சியின் மேற்குவங்க மாநில தலைவர் சமுரூல் ஹசன் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ஒவைசியை பார்த்து மம்தா பானர்ஜி பயப்படுவதால் தான், பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி மறுக்கிறது. இதன் மூலம் சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தோல்வியடைவது நிச்சயம்’’ எனக் கூறினார்.