Published : 25 Feb 2021 01:11 PM
Last Updated : 25 Feb 2021 01:11 PM

கோட்சேவுக்கு சிலை வைத்த தலைவர் மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியில்  இணைந்தார்: பாஜக கிண்டல்

நாதுராம் கோட்சேவைப் பின்பற்றுவேன், அவரின் கொள்கைகளை மக்களிடம் பரப்புவேன் எனக் கூறிய மத்தியப் பிரதேச அரசியல் பிரமுகர் பாபுலால் சவுராஸியா காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் பாபுலால் சவுரேஸியா, முன்னாள் முதல்வர் கமல்நாத் முன்னிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

கடந்த 2019-ம் ஆண்டில் பாபுலால் சவுரேஸியாவின் செயல்பாடுகள் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டன. மத்தியப் பிரதேசம் குவாலியரில் நாதுராம் கோட்சேவுக்குக் கோயில் கட்டி, பாபுலால் தலைமையில் பலர் வழிபாடு நடத்தினர். கோட்சேவின் கொள்கைகளை ஒரு லட்சம் பேருக்குப் பரப்புவேன் என்று பாபுலால் தெரிவித்தார்.

இந்நிலையில் கோட்சேவின் கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றுவேன் எனக் கூறிய பாபுலால் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்குக் காங்கிரஸ் கட்சி சார்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. ட்விட்டரிலும் காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்தது.

பாபுலால் சவுரேஸியா தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்தார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அந்தக் கட்சியிலிருந்து விலகிய சவுரேஸியா, இந்து மகாசபாவில் இணைந்தார். இந்து மகாசபா சார்பில் போட்டியிட்டு குவாலியர் நகராட்சியில் வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

கொள்கை முரண்பாட்டுடன் இருக்கும் பாபுலாலை காங்கிரஸ் கட்சி எவ்வாறு ஏற்றுக்கொண்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்தியப் பிரதேச குவாலியர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பிரவீண் பதக் கூறுகையில், "பாபுலால் முதலில் காங்கிரஸ் கட்சியில்தான் இணைந்திருந்தார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் இருந்து பிரிந்துவிட்டார்.

அதன்பின் இந்து மகாசபாவில் இணைந்த பாபுலால் தேர்தலில் வெற்றி பெற்று கவுன்சிலரானார்.
எங்கள் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தனது தந்தையைக் கொன்றவர்களையே மன்னித்துவிட்டார். இந்திரா காந்தி குடும்பத்தினர் பரந்த மனதுடையவர்கள். கோட்சே வழிபட்ட பாபுலால் தொடக்கத்தில் காந்தியை வழிபட்டவர் என்பதை மறந்துவிடக் கூடாது" எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறித்து பாபுலால் சவுரேஸியா கூறுகையில், "நான் இந்து மகாசபாவில் இருந்தபோது, கோட்சேவை வழிபட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டேன். ஆனால், தொடக்கத்தில் இருந்தே நான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன். இப்போது மீண்டும் அந்தக் குடும்பத்துக்குச் சென்றுள்ளேன்" எனத் தெரிவித்தார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் ராகுல் கோத்தாரி கூறுகையில், "கடந்த ஒரு மாதத்துக்கு முன், முன்னாள் முதல்வர் கமல்நாத், முதல்வர் சிவராஜ் சவுகானிடம், நீங்கள் மகாத்மா காந்தியுடன் இருக்கிறீர்களா அல்லது நாதுராம் கோட்சேவுடன் இருக்கிறீர்களா எனக் கேட்டிருந்தார். இப்போது, கமல்நாத் இந்தக் கேள்விக்கு என்ன பதில் அளிக்கப் போகிறார்" எனத் தெரிவித்தார்.

அனைத்து இந்திய இந்து மகாசாபாவின் தலைவர் ஜெய்வீர் பரத்வாஜ் கூறுகையில், "இப்போதுள்ள சூழலில் காங்கிரஸ் கட்சி யாரை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x