

ராகுல் காந்தியின் தேர்தல் வெற்றி கனவு, ஓட்டை பலூனில் காற்றை நிரப்புவதற்கு சமம் என சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 200 இடங்களில் வெற்றி பெறும் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது பிரச்சாரக் கூட்டங்களில் கூறி வரும் நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கட்சியின் 'சாம்னா' பத்திரிகையில் எழுதியுள்ள தலையங்கத்தில், "நாடு முழுவதும் காங்கிரசுக்கு எதிரான அலை வீசி வருகிறது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடக் கூட யாரும் விரும்பவில்லை.
இந்நிலையில் ராகுல் 200 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என கூறிவருகிறார். ராகுல் காந்தியின் தேர்தல் வெற்றி கனவு, ஓட்டை பலூனில் காற்றை நிரப்புவதற்கு சமம் . ராகுலின் இந்த பேச்சு, அவரது தாயார் சோனியாவையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தலைமையில் தேர்தலை எதிர்கொள்ளும் தேசிய ஜனநாயக கூட்டணி 275 இடங்களை கைப்பற்றும் என்றார்.
மேலும், மக்களவை தேர்தலுக்குப் பின்னர் ஆம் ஆத்மி கட்சி காணாமல் போய்விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.