

சென்னையில் செயல்படும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், மத்திய அரசால் வழங்கப்படும் மூன்று வகையான குடியரசுத் தலைவர் விருதுகள் கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. தவிர, ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது.
இதன் முதல் விருது பின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்போலோவுக்கு 2010-ல் வழங்கப்பட்ட பிறகு 10 ஆண்டுகளாக அவ்விருது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் உள்ளன.
செம்மொழி நிறுவனத்துக்கு தமிழக முதல்வரே தலைவர் என்பதால் கலைஞர் விருதுக்கான தேர்வு அவரது தலைமையில் செய்யப்பட்டு, மாநில அரசால் வழங்கப்பட வேண்டும்.
இது தொடர்பான செய்தி ‘இந்து தமிழ்’ நாளிதழில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதன் தாக்கமாக, 2011 முதல் 2016 வரையிலான ஆண்டுகளுக்கான விருது அறிவிப்பு 2017-ல் வெளியானது. கடைசியாக ஏப்ரல் 2020 வரையிலான விருது அறிவிப்பும் வெளியானது. இதற்கான மனுக்கள் பெறப்பட்டபோதிலும் விருதுகள் வழங்கப்படவில்லை.
இதனால், மீண்டும் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ல் ‘இந்து தமிழ்’செய்தி வெளியிட, அதை ஆதாரமாக்கிய தந்தை பெரியார் திராவிடக் கட்சியின் மாநில துணைத்தலைவரும், மூத்த வழக்கறிஞருமான துரைசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில், மத்திய கல்வித்துறை, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கான பதில், வரும் மார்ச் 3-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எனவே அதற்குள் விருதாளர்களை அதிமுக அரசு தேர்வு செய்து, வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பலனடையுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.
அதிகாரிகள் விளக்கம்
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் கூறும் போது, “மத்திய அரசின் கீழ் செயல்படும் தமிழாய்வு நிறுவனத்துக்கு நிரந்தர இயக்குநரை நியமிப்பதில் 14 ஆண்டு கால தாமதம் ஏற்பட்டது. இதனால் விருதுப் பணிகளும் முடங்கிவிட்டன. குடியரசுத் தலைவர் விருது, பிரதமரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
5 பேர் குழு பட்டியல்
ஆனால் கலைஞர் விருதுக்கான முழுப்பொறுப்பு தமிழக அரசை சார்ந்தது. விருதுக்குரியவர்களை தேர்வு செய்யும் 5 பேர் குழுவுக்கான பட்டியல், தமிழாய்வு நிறுவனத்தால் முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவரது இறுதி முடிவுக்காக காத்துள்ளது” என்று தெரிவித்தனர்.
இந்த விருதில் இதுவரை மத்திய, மாநில அரசுகள் கொடுக்காத மதிப்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலை, ஐம்பொன் திருவள்ளுவர் சிலை, கலைஞர் மு.கருணாநிதியின் உருவம் பதித்த 10 பவுன் தங்கக்காசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது. இதைப் பெறும் சிறந்த புலமைமிக்க விருதாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். பலஆண்டுகளுக்கு முன் இவ்விருதுக்கு விண்ணப்பித்த வர்களில் சிலர் தற்போது இறந்து விட்டனர். பலர், 10 ஆண்டுகளாக முடிவு தெரியாமல் மீண்டும் மீண்டும் விண்ணப்பித்துள்ளனர்.