

காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வழியாகக் குண்டாற்றுடன் இணைக்கும் காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அடிக்கல் நாட்டினார். ரூ.6,941 கோடி மதிப்பில் உருவாகும் இந்த திட்டத்துக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் விவசாய அமைப்பினரும் கன்னட அமைப்பினரும் தமிழக அரசின் திட்டத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் போராட்டம் நடந்தது.
இந்நிலையில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி நேற்று டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார். அப்போது காவிரி நீர்ப்பாசன பகுதியில் தமிழக அரசு மேற்கொள்ளும் புதிய திட்டத்தால் கர்நாடக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த திட்டத்துக்கு அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பின்னர் ரமேஷ் ஜார்கிஹோளி கூறும்போது, '‘தமிழக அரசின் திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தை நாடவும் இருக்கிறோம். இந்த விவகாரத்தில் அவசியம் ஏற்பட்டால் கர்நாடகாவில் அனைத்துக் கட்சி மற்றும் எம்பிக்கள் கூட்டம் நடத்தி மத்திய அரசுக்கு எங்களுக்கு நிலைப்பாட்டை தெரிவிப்போம்'' என்றார்