

கர்நாடகாவின் அரசவை கவிஞராக அங்கீகரிக்கப்பட்ட குவெம்பு, கன்னட மொழியின் சிறந்த கவிஞராகவும், எழுத்தாளராகவும் கொண்டாடப்படுகிறார். இவர் இயற்றிய 'ஜெய் பாரத ஜனனிய தனுஜாதே' என தொடங்கும் பாடல், கர்நாடகாவின் தேசிய கீதமாக பாடப்படுகிறது. குவெம்பு-வின் மறைவுக்கு பிறகு ஷிமோகா மாவட்டத்தில் குப்பள்ளி கிராமத்தில் அவர் வாழ்ந்த வீடு, நினைவு இல்லமாக மாற்றப்பட்டது.
இங்கு குவெம்பு பயன்படுத்திய பொருட்கள், நூல்கள் மற்றும் பெற்ற விருதுகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. குவெம்பு நினைவு அறக்கட்டளை பராமரித்து வந்த இந்த நினைவகத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. அதில் குவெம்பு பெற்ற பத்ம விருது, பத்ம பூஷன் விருது, சாகித்ய அகாடமி விருது, பம்பா விருது உள்ளிட்ட முக்கிய விருதுகளும், தங்கத்தால் ஆன பதக்கங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில் ஞானபீட விருது, மைசூரு மகாராஜா விருது உள்ளிட்ட சில விருதுகள் திருடப்படவில்லை.
நினைவு இல்லத்தில் விருதுகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தால் குவெம்பு அறக்கட்டளை நிர்வாகிகளும், கன்னட எழுத் தாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த குற்றத்தில் தொடர்பு டையவர்களை உடனடியாக கைது செய்து, விருதுகளை பறிமுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஷிமோகா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்ணு வர்தன் கூறும்போது, “இந்த சம்பவம் தொடர்பாக குப்பள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கயவர்கள், நினைவு இல்லத்தை நன்றாக கவனித்து இந்த காரியத்தை அரங்கேற்றியுள்ளனர். விருது களை திருடுவதற்கு முன்பாக நினைவு இல்லத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்துள்ளனர். இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது” என்றார்.