

60-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் உள்ள 45-வயதுக்கு மேலானவர்களுக்கும் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது.
நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.
இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
சிகிச்சை பெறுபவர்களில் 74 சதவீதத்துக்கும் அதிகமானோர், கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளனர். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில், தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் கரோனா தடுப்பூசி முதற்கட்ட பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. 3 கோடி சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி என்ற இலக்குடன் பணி தொடங்கியது. இதுவரை நாடுமுழுவதும் மொத்தம் 1,21,65,598 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மார்ச் மாத மத்தியில் இரண்டாம் கட்ட தடுப்பூசி பணி தொடங்கவுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:
60-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் உள்ள 45-வயதுக்கு மேலானவர்களுக்கும் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும்
மார்ச் 1-ம் தேதி தொடங்கும் 2 வது கட்ட கரோனா தடுப்பூசி பணிகளில் பல தனியார் மருத்துவமனைகள் பங்கேற்க உள்ளன. அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்.
இந்தியாவில் சுமார் 10 ஆயிரம் அரசு மருத்துவமனைகளிலும், 20 ஆயிரம் தனியார் மையங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
தனியார் மருத்துவமனைகளுக்கும் கரோனா தடுப்பூசி போட விரைவில் அனுமதி வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகள் அதற்கு கட்டணம் வசூலிக்கலாம் கட்டணத்தை அடுத்த 4 நாட்களுகளில் சுகாதார அமைச்சகம் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.