

நாட்டிலேயே பாஜக வீழ்வதன் தொடக்கமாகப் புதுச்சேரி தேர்தல் இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேலும், புதுச்சேரி தேர்தலில் மக்கள் பாஜகவுக்குத் தகுந்த பதிலடியைக் கொடுப்பர் என்றும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தேர்தல் பார்வையாளராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அவர் தெரிவித்ததாவது:
''நாட்டிலேயே பாஜக வீழ்வதன் தொடக்கமாகப் புதுச்சேரி தேர்தல் இருக்கும். காங்கிரஸ் கட்சி மூலம் ஜனநாயகத்தின் வலிமை உறுதிப்படுத்தப்படும்.
காங்கிரஸ் அரசு செயல்படக் கூடாது என்பதுதான் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடிக்குக் கொடுக்கப்பட்ட பணி. மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான மத்திய அரசு, புதுச்சேரியின் ஜனநாயகத்தைக் கொலை செய்துவிட்டது.
தற்போது எம்எல்ஏக்களைப் பணம் மற்றும் அதிகாரத்தைக் காட்டி கவர்ந்து விட்டனர். ராஜினாமா செய்த எம்எல்ஏக்களால் அல்ல, மத்திய அரசு சார்பில் நியமிக்கப்பட்ட நியமன எம்எல்ஏக்கள் மூலமாகவே காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. அவர்களுக்கு ஓட்டு உரிமை அளித்தது ஜன்நாயகத்தை மீறிய செயல். அப்போது சட்டமும் விரைவாகச் செயல்படவில்லை.
தேர்தல் நேரம் என்பதாலேயே கிரண் பேடி துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் மத்திய அரசு ஆட்டுவித்த பொம்மையாக இருந்தாலும், அரசுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் கிரண் பேடியே மேற்கொண்டதாகவும் இதில் மத்திய அரசின் பங்கு எதுவுமில்லை என்றும் மக்களிடையே நிறுவ முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் பாஜகவின் யதேச்சதிகார செயல் மற்றும் ஜனநாயகத்தின் கொள்கைகளைக் காற்றில் வீசியதற்கு, புதுச்சேரி வாக்காளர்கள் தேர்தலில் தகுந்த பதிலடியைக் கொடுப்பர். மக்களைச் சென்றடைய வேண்டிய வளர்ச்சித் திட்டங்களைத் தடுத்ததன் மூலம் அவர்கள் (பாஜக) மிகப் பெரிய குற்றத்தைச் செய்துள்ளனர், இதற்காக மக்களே பாஜகவைத் தண்டிப்பர்.
அவர்களின் பண பலம், அரசியல் அதிகாரம் மற்றும் பிற கட்சிகளின் ஆட்சி குறித்த சகிப்பின்மை ஆகியவற்றை இந்த தேசத்தில் முடிவுக்கு வர வேண்டும், அதை மெய்ப்பிக்க புதுச்சேரி உண்மையான களமாக இருக்கும்."
இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.