Last Updated : 15 Nov, 2015 10:24 AM

 

Published : 15 Nov 2015 10:24 AM
Last Updated : 15 Nov 2015 10:24 AM

இந்தியாவின் நல்ல மன்னர்களும் கெட்ட மன்னர்களும்..

இரண்டு வாரங்களுக்கு முன்பு பெங்களூரு வந்த பாகிஸ்தான் ஹை கமிஷனர் அப்துல் பாசித்தை சந்தித்தேன். அப்போது, தென் இந்தியாவில் உங்கள் பயண திட்டம் என்ன என்று கேட்டேன். அதற்கு, பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப பூங்காவை பார்வையிடுவேன். அடுத்து மைசூர் சென்று ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள திப்பு சுல்தான் மாளிகையை சுற்றிப் பார்ப்பேன் என்று கூறினார்.

திப்புவை இந்தியர்கள் எல்லோரும் பெருமையாக நினைப்பார்கள் என்று பாசித் நினைத்தது தவறு என்பது சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. கர்நாடகாவில் திப்புவின் பிறந்த நாள் விழாவை அரசு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் சில விஷயங்களை போல இந்து - முஸ்லிம் உறவும் சர்ச்சைக்குரியதாக உள்ளது.

நம்மை பொறுத்த வரையில் மன்னர்களை நல்லவர்கள் (அசோகர், அக்பர்..) கெட்டவர் களாக (அவுரங்கசீப், திப்பு சுல்தான்) பார்க்கும் நிலை உள்ளது. இதுதான் நம் நாட்டின், சமூகத்தின் பண்பாக உள்ளது. வரலாற்றை உண்மை, காரண காரியத்தின் அடிப்படையில் அணுகாமல், உணர்ச்சி வயப்பட்டு அணுகும் மனநிலை. பெரும்பாலும் படிக்காதர்கள், அரைகுறையாக படித்தவர்களின் மனப்பாங்கு.

இந்துக்களுக்கு எதிராக ஜிகாத் நடத்தியவர் திப்பு என்பதை மட்டும் நம்புகின்றனர். ஆனால், திப்புவை பற்றி புத்தகங்களில் என்ன சொல்லி இருக்கிறது என்பதை படித்துப் பார்ப்பது இல்லை. இதில் என்ன பிரச்சினை என்றால், திப்புவை பற்றி இந்தியாவில் சில புத்தகங்களே எழுதப்பட்டுள்ளன.

நம் நாட்டில் நாட்குறிப்புகளை வைத்திருப்பதோ அல்லது நினைவுகளை பதிவு செய்து வைப்பதோ வழக்கம் இல்லை. கடந்த கால வரலாற்றை ஆவணப் படுத்துவதிலும் நமக்கு ஆர்வம் இல்லை. எனவே, திப்புவை பற்றி இந்தியர்கள் யாரும் புத்தகம் எழுதுவதில்லை. அதனால்,19-ம் நூற்றாண்டில் லூயிஸ் போரிங் எழுதிய, ‘ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் தெற்கில் ஆட்சி அதிகாரத்துக்காக முசல்மான் களின் போராட்டம்’ என்ற புத்தகத்தை ஒருவர் கட்டாயம் படிக்க வேண்டும். அதில் இரண்டு மூன்று விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.

முதலாவது, திப்புவை வெற்றி கொள்வது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருந்துள்ளது. மராட்டியர்களை விட திப்பு மிகப் பெரிய போர் வீரராக இருந்துள்ளார். இதை வரலாற் றாசிரியர் சர் ஜாதுநாத் சர்க்காரின் புத்தகங்களை படிக்கும் போது தெரிந்து கொள்ள முடியும்.

பானிபட் போரின்போது மராட்டியர்களை ஆப்கன் மன்னர் அகமது அப்தாலி வென்று ஆட்சியைப் பிடித்தார். கடந்த 1761-ம் ஆண்டில் இருந்து திப்பு கொல்லப்பட்ட 1799-ம் ஆண்டு வரையிலான 40 ஆண்டு காலம் அவரை எதிர்க்க பிரிட்டிஷார் படாத பாடுபட்டுள்ளனர். இந்த கால கட்டத்தில் பஞ்சாபை தவிர மற்ற எல்லா இடங்களையும் வென்றுவிட்டனர். சில ஆண்டுகளுக்கு பின் பஞ்சாப் கூட மன்னர் ரஞ்சித் சிங் மரணத்துக்குப் பின் பிரிட்டிஷார் வசம் சென்றது.

ஆனால், திப்புவிடம் இருந்து மட்டும் உண்மையான பலமான எதிர்ப்பை பிரிட்டிஷார் சந்தித்தனர். மிகவும் திறமைவாய்ந்த படைத் தளபதியாக விளங்கியவர் திப்பு. அரசியல் சூட்சுமம் தெரிந்தவர். அதனால், பிரிட்டிஷாரை விரட்ட பிரான்ஸுடன் நட்புறவு வைத்தவர். மேலும், போரில் நவீனத்தை புகுத்தியவர்.

இரண்டாவது, போரில் ஏவுகணையை பயன்படுத்திய முதல் படை திப்புவுடையதுதான் என்பது எல்லோருக்கும் தெரியும். ராக்கெட்டுகளில் பிளேடுகளை பொருத்தி எதிரி படைகள் மீது திப்புவின் வீரர்கள் வீசியுள்ளனர். எனினும், ஆர்தர் வெல்லெஸ்லி திப்புவை வெற்றி கொள்கிறார்.

திப்புவின் ராணுவ பலம், வீரம், தேசப் பற்று, அவருடைய வளர்ச்சி பணிகள் போன்ற எல்லாவற்றையும் எளிதாக கவனிக்க தவறிவிடுகின்றனர். ஆனால், உண்மையோ பொய்யோ இந்துக்களை மதம் மாற்றினார் அல்லது இந்துக்களை படுகொலை செய்தார் என்ற ஒன்றை மட்டும் நம்புகின்றனர்.

கலிங்க படைகளை அசோகர் வெற்றி கொண்ட போது, எந்த வெளிநாட்டினரையும் முஸ்லிம் களையும் அவர் படுகொலை செய்யவில்லை. ஆனால், ஆயிரக்கணக்கான ஒரியா மொழி பேசிய இந்துக்களை கொலை செய்தார் என்று நமக்கு கதைகள் மூலம் சொல்லப்பட்டுள்ளது. இந்துக்களை படுகொலை செய்தாலும் சிறந்த சக்கரவர்த்தி என்று அசோகரை கூறுகிறோம். அவருடைய சிங்க சின்னம், இந்திய அரசின் அதிகாரப்பூர்வ சின்னமாக இருக்கிறது. இந்திய தேசிய கொடியில் நடுவில் உள்ள சக்கரம், ‘அசோக சக்கரம்’ என்றழைக்கப்படுகிறது. ஏனெனில், அந்த சக்கரமும் அசோகருடைய சின்னம்தான்.

இரண்டு பேரும் ஒரே குற்றம் புரிந்தனர் என்று கூறும் போது, நாம் ஏன் அசோகரை மதிக்கிறோம்; திப்புவை மதிக்கவில்லை? நமக்கு விடை தெரியும். இந்தியாவில் இந்துக்கள் செய்வதை முஸ்லிம் மன்னன் செய்துவிட்டு தப்ப முடியாது.

பாட்டியாலாவை ஆட்சி செய்தவர் மகாராஜா அலா சிங். இவர் எந்த ராணுவ சாதனை யையும் படைக்கவில்லை. ஆனால், செல்வாக்கு மிக்கவ ராக உயர்ந்தார். ஏனெனில், மராட்டியர்களுக்கும் ஆப்கானிஸ் தான் மன்னர் அகமது ஷா அப்தாலிக்கும் நடந்த போரில், அப்தாலிக்கு உதவியாக இருந்தார் அலா சிங். அதனால் அலா சிங்குக்கு ஆப்கன் அரசு பரிசுகள் வழங்கியது. இந்த நிலையில், அலா சிங்கையோ அவரது மூதாதையர்களையோ யாராவது தேச துரோகிகளாக பார்க்கின்றனரா? தவிர பஞ்சாபை ஆண்ட மகாராஜா ரஞ்சித் சிங்கை தொடர்ந்து பாட்டியாலா மன்னர்கள் எதிர்த்து வந்தனர். ஆனால், அவர்களை யாரும் தேசத்துக்கு எதிரானவர்களாக கருதவில்லை. முஸ்லிம் மன்னர் என்றால் மட்டும் சில வரைமுறைகள் வகுக்கப்படுகின்றன.

முஸ்லிம் மன்னர்களை பற்றி படிக்கவோ, எழுதவோ நாம் விரும்புவதில்லை. ஆனால், அவர்களை பற்றிய மோசமான அல்லது தவறான விஷயங்களை மட்டும் எப்போதும் நம்புகிறோம். நமக்கு அரைகுறையாக தெரிந்த விஷயங்களை வைத்து கொண்டு அவர்களை எப்போதும் எதிர்ப்பதற்கு தயாராக இருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x