

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பின் சட்டப்பேரவை கலைக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால், அங்கு ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. இதனால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தின. இதனையடுத்து, துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசையின் உத்தரவின்படி சட்டப்பேரவையில் கடந்த 22-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
முதல்வர் உரை முடிந்தவுடன் அவருடன் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானம் நிறைவேறவில்லை என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.
இதனையடுத்து, புதுச்சேரியில் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த பிறகு, ஆளுநர் மாளிகையில் தமிழிசையை முதல்வர் நாராயணசாமி சந்தித்தார். அங்கு முதல்வர், அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் நாராயணசாமி அளித்தார். அவரும் அதனை ஏற்றுக் கொண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.
நாராயணசாமியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஏற்றுக்கொண்டார். இந்தநிலையில் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வர் நாராயணசாமி ராஜினாமா செய்த பிறகு எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இதையடுத்து சட்டப்பேரவையை முடக்கி வைத்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு புதுச்சேரி சட்டப்பேரவை கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும்.’’ எனக் கூறினார்.