

அகமதாபாத் மாநகராட்சி தேர்தலில் 7 வார்டுகளை கைபற்றிய அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி குஜராத்தில் நடைபெறவுள்ள நகராட்சி தேர்தலிலும் போட்டியிடுகிறது. இதற்காக அக்கட்சியின் தலைவர் ஒவைசி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
குஜராத் மாநிலத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
6 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே பாஜக பல வார்டுகளில் முன்னிலை பெற்றது.
இறுதியாக முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மொத்தமுள்ள 576 வார்டுகளில் ஆளும் பாஜக 451 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 44 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது. அசாதுதீனின் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 7 வார்டுகளை கைபற்றியுள்ளது. ஆம் ஆத்மி 27 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
அகமதாபாத் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 192 இடங்களில் பாஜக 159 இடங்களிலும் காங்கிரஸ் 25 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. முதன்முறையாக அசாதுதீனின் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 7 வார்டுகளை கைபற்றியுள்ளது. இந்த வார்டுகள் அனைத்தும் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்களாகும்.
சூரத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 120 வார்டுகளில் 93 இடங்களில் பாஜக வென்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. முதன்முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி 27 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தநிலையில் குஜராத் மாநிலம் மோடாசா நகராட்சி தேர்தல் பிப்ரவரி 28-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஒவைசி பேசியதாவது:
‘‘குஜராத் மாநிலம் மோடாசாவில் கடந்த 2008-ம் ஆண்டு ரம்ஜான் மாதத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 15 வயது சிறுவன் ஜமால் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடியிடமும், பாஜகவிடமும் கேட்கிறேன். ஜமால் பலிக்கு உங்கள் பதில் என்ன? குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவில்லை. இதே கேள்வியை தான் நமது முதுகில் குத்திய காங்கிரஸிடமும் கேட்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேசியதுண்டா.
இந்து - முஸ்லிம் என பார்க்க வேண்டாம். ஆனால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நமக்கு நீதி வழங்காத கட்சிகளுக்கு பிப்ரவரி 28-ம் தேதி நடைபெறவுள்ள நகராட்சி தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.’’ எனக் கூறினார்.