Last Updated : 24 Feb, 2021 09:58 AM

 

Published : 24 Feb 2021 09:58 AM
Last Updated : 24 Feb 2021 09:58 AM

மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களிலிருந்து வருவோருக்கு கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்: டெல்லி அரசு

மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களிலிருந்து வருவோருக்கு கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என டெல்லி அரசு வலியுறுத்தியுள்ளது. வரும் 26-ம் தேதி முதல் மார்ச் 15-ம் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் எனத் தெரிகிறது.

கரோனா பாதிப்பு நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில் நாடு முழுவதும் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புதிதாக தொற்று பாதிக்கப்பட்டோரில் 86% பேர் மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களிலேயே உள்ளனர்.

அதனால், சம்பந்தப்பட்ட 5 மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் 72 மணி நேரத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்ட கரோனா சான்றிதழுடன் வந்தால் மட்டும் டெல்லி விமானங்களில் ஏற அனுமதிக்கப்பட வேண்டும்.

இந்தப் புதிய விதிமுறை பிப்ரவரி 26 நள்ளிரவு முதல் மார்ச் 15 நண்பகல் வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி அரசு விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும்.

சமீப நாட்களில், நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு மகாராஷ்டிரா, கேரளாவில் மட்டுமே 75% உள்ளது. மத்திய சுகாதார அமைச்சக அறிவிப்பின்படி செவ்வாய்க்கிழமையன்று மட்டும் மகாராஷ்டிராவில் புதிதாக 5,210 பேருக்கு பாதிப்பு உறுதியானது. அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் கேரளாவில் 2,212 பேருக்குத் தொற்று உறுதியானது. மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 18 பேர் பலியாகினர். கேரளாவில் 16 பேர், பஞ்சாப்பில் 15 பேர் பலியாகினர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 104 பேர் பலியாகினர்.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் மொத்தம் 13,742 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை நாடு முழுவதும் 1,10,30,176 பேருக்குக் கரோனா பாதித்துள்ளது. கரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,07,26,702. பலி எண்ணிக்கை 1,56,567 என்றளவில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,46,907 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை, 1,21,65,598 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x