

இந்தியாவைப் பிரித்தாளும் அரசியலை கையிலெடுக்க வேண்டாம்; மக்கள் எப்போதோ அதை நிராகரித்துவிட்டனர் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பாஜக தேசியத் தலைவர் நட்டாவும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி, தென் இந்தியாவில் அவ்வப்போது அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
முன்னதாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "எனது அரசியல் வாழ்வில் முதல் 15 ஆண்டு காலம் நான் வடகே எம்.பி.யாக இருந்தேன். ஆகையால், நான் வேறுவிதமான அரசியலுக்குப் பழகியிருந்தேன். அரசியல் ரீதியாக திடீரென கேரளாவுக்கு மாறுதலானது புத்துணர்வைத் தந்தது. கேரள மக்கள், சமூக பிரச்சினைகள் மீது மேலோட்டமாக இல்லாது ஆழமாக நாட்டம் கொண்டிருக்கின்றனர். அரசியலை கேரள மக்கள் அணுகுவதில் ஒருவித நுண்ணறிவு இருக்கிறது" என்று பேசியிருந்தார்.
இதற்கு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநில அமேதி தொகுதியில் ராகுல்காந்தி 3 முறை எம்.பி.,யாக இருந்தார். 2019 தேர்தலில் அவர் பாஜகவின் ஸ்மிருதி இராணியிடம் தோல்வியைத் தழுவினார். கேரளாவின் வயநாட்டில் வெற்றி பெற்ற அவர் தற்போது 3 முறை வெற்றி பெற்ற வட இந்தியத் தொகுதியைத் தாழ்த்தியும், ஒரு முறை வெற்றி பெற்ற கேரள தொகுதியை உயர்த்திப் பிடித்தும் பிரிவினையைத் தூண்டுவதாக பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தான் ஓர் ஐஏஎஸ் அதிகாரியின் மகன் என்பதால் சிறு வயதிலிருந்தே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வசித்துள்ளதாகவும். இந்தியா ஒன்று, தேசத்தைப் பிரிக்க வேண்டாம் என ராகுலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விடரில், நான் தென்இந்தியாவைச் சேர்ந்தவர். மேற்கு மாநிலத்திலுள்ள ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக இருக்கிறேன். நான் பிறந்தது, படித்தது, பணி புரிந்தது எல்லாம் வடக்கே. உலக அரங்கில் இந்தியப் பிரதிநிதியாக இருந்துள்ளேன். இந்தியா ஒரே தேசம். எப்போதுமே ஒரு பகுதியைக் குறைத்தும் மற்றொன்றை உயர்த்தியும் பேசாதீர்கள். எங்களைப் பிரிக்காதீர்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவும் ட்விட்டரில் ராகுல் காந்தியை வசைபாடியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சில நாட்களுக்கு முன் ராகுல் வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்ற ராகுல் காந்தி தேசத்தின் மேற்கு பிராந்திய மக்களைப் பற்றி விஷத்தைக் கக்கினார்.
இன்று தெற்கே ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் வட இந்தியர்களைக் குறைத்துப் பேசியுள்ளார். பிரித்தாளும் அரசியல் எடுபடாது. மக்கள் இதை எப்போதோ நிராகரித்துவிட்டனர். இன்று குஜராத்தில் நடந்திருப்பதை நீங்கள் கவனியுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.