

குஜராத்தில் கடந்த 21-ம் தேதிஉள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் பாவ்நகர் மாநகராட்சிக்கும் தேர்தல் நடைபெற்றது. இப்பகுதியைச் சேர்ந்தவர் வைஷாலி (25). நிறைமாத கர்ப்பிணியான அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் அவர் வீடு திரும்பினார். நேராக வீட்டுக்கு செல்ல விரும்பாத வைஷாலி, பாவ்நகர் மாநகராட்சியின் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குரிமையை செலுத்தினார். அவர் வாக்களித்துவிட்டு வரும் வரை, ஆம்புலன்ஸில் இருந்த சுகாதார ஊழியர், 2 நாள் கைக்குழந்தையை கவனித்து கொண்டார்.
இதுகுறித்து வைஷாலி கூறும்போது, "அனைத்து தேர்தல்களிலும் வாக்களிப்பது மக்களின் தலையாய கடமை. ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் சுகாதார ஊழியரும் எனது விருப்பத்தை புரிந்து கொண்டு வாக்குச்சாவடியில் காத்திருந்தனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.