

புதுடெல்லி: டூல்கிட் வழக்கில் சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு (22) டெல்லி நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.
ஸ்வீடனை சேர்ந்த பருவநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க், டூல்கிட் லிங்க் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு எந்த மாதிரி முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்து. இந்திய அரசுக்கு எதிரான சதியாக இந்த டூல்கிட்டை டெல்லி போலீஸார் கருதுகின்றனர். இதனை பெங்களூருவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி, மும்பையை சேர்ந்த நிகிகா ஜேக்கப், ஷாந்தனு ஆகியோர் உருவாக்கியதாக கருதுகின்றனர். இதன் பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருப்பதாக சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் சதி மற்றும் தேசதுரோக குற்றச்சாட்டுகளின் கீழ் திஷா ரவியை கடந்த 14–ம் தேதி கைது செய்தனர். அவரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. பிறகு கடந்த 19–ம் தேதி அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் திஷா ரவிக்கு டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தர்மேந்தர் ரானா இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.