

உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமான அசோக் சிங்கால் (89), அயோத்தி ராமர் கோயில் போராட்டத்துக்கு உருவம் கொடுத்தவர். கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்படுவதற்கு இவரே அடித்தளம் இட்டதாக கருதப்படுகிறது.
உ.பி.யின் அயோத்தியில் தொடங்கிய ராமர் கோயில் பிரச்சினை, அசோக் சிங்கால் கையில் எடுத்த பின்னரே பெரும் போராட்டமாக உருவம் கொண்டது. இதற்காக, 1983-ல் உ.பி.யின் முசாபர் நகரில் ஒரு கூட்டம் கூட்டிய சிங்கால், “அயோத்தியின் ராமர் கோயில், மதுராவின் கிருஷ்ணன் கோயில், வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோயில் ஆகியவற்றை வெளி நாட்டவர்களான முகலாயர்கள் படை எடுத்துவந்து சிதைத்தனர். இக்கோயில் பகுதிகளில் உள்ள மசூதிகளை இந்துக்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்” என முழங்கினார். இது நாடு முழுவதிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதன் அடுத்த கட்டமாக 1984-ல் டெல்லியில் சாதுக்கள் கூட்டம் நடத்திய சிங்கால், அக்கூட்டத்தில் ‘ராமஜென்ம பூமி நியாஸ்’ என்ற அறக்கட்டளையை நிறுவினார். பின்னர் இதனுடன் விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) இணைந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக, 1990, அக்டோபர் 30-ம் தேதி கரசேவை நடத்தப்போவதாக அறிவித்தார். இந்த கரசேவை, அக்டோபர் 30, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. உயிரிழப்பை ஏற்படுத்திய இந்த கரசேவை, உ.பி. அரசியலில் மாற்றத்தை நிகழ்த்தியது. பாரதிய ஜனதா அசுர வளர்ச்சி பெற்று இங்கு ஆட்சியை பிடித்தது. இதற்கு வித்திட்டவராக அசோக் சிங்கால் கருதப்பட்டார். ராமர் கோயில் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்து கரசேவகர்களால் 1992, டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அத்வானி நடத்திய ரத யாத்திரையுடன் சிங்காலின் தீவிரப் பிரச்சாரமும் காரணம் எனப் பேசப்பட்டது.
இதேபோல், மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க 2013-ல் நடந்த அலகாபாத் கும்பமேளாவில் முதன்முதலில் அடித்தளம் இட்டார் சிங்கால். இங்கு சிங்கால் கூட்டிய சாதுக்களின் சபை பாஜகவின் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் என அறிவித்து பரபரப்பை கிளப்பினார். ஆனால் தடைபட்டு போன அந்த அறிவிப்பை பின்னர் ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில், “மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
மேற்கு உ.பி.யின் அலிகர் மாவட் டம், அத்ரோலி நகரில் 1926-ம் ஆண்டு, செப்டம்பர் 15-ம் தேதி பிறந்தவர் சிங்கால் இந்து மதத்தில் இருந்த அதீத ஈடுபாட்டினால், ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார். 1950-ல் உ.பி.யின் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உலோக பொறியாளராகப் பட்டம் பெற்றவர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு நேரத் தொண்டராக இணைந்தார். பிறகு 1980-ல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அங்கமான விஎச்பி.யின் இணைச் செயலாளராக அமர்த்தப்பட்டார். அடுத்த 4 ஆண்டுகளில் அதன் பொதுச் செயலாளர் ஆன சிங்கால், பிறகு தலைவராக 2011-ம் ஆண்டு வரை நீடித்தார்.
விஎச்பி.யில் இணைச் செய லாளராக பணியாற்றி வந்த சிங்காலுக்கு தமிழகத்தின் மீனாட்சி புரத்தில் நடந்த மதமாற்றம் தான் முக்கியத் திருப்பம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இங்கு 1981-ல் நடந்த மதமாற்ற சம்பவத்துக்கு பின் தலித்துகளுக்காக 200 கோயில்கள் விஎச்பி சார்பில் கட்டப்பட்டன. இதன் பிறகு மதமாற்றம் நிகழ்வது நின்று போனதாகக் கூறப்படுகிறது. இந்த பிரச்சினையை அலச வேண்டி 1984-ல் சிங்கால் நாட்டின் முக்கிய சாதுக்களை வைத்து டெல்லியில் நடத்திய கூட்டம், ராமர் கோயில் போராட்டத்துக்கும் வித்திட்டது. இதற்கு முன்பாக சிங்கால் நடத்திய பசு காக்கும் இயக்கம், அவரை வடஇந்திய மக்களிடையே பிரபலப்படுத்தியது.
சிங்கால் அலகாபாத்தில் இருந்த தன் குடும்ப சொத்துகளை அங்கு வேதபாட சாலைகள் நடத்த இலவசமாகக் கொடுத்தார். அத்ரோலியில் உள்ள தனது வீட்டையும் சிங்கால் தர்மசாலை நடத்த தானமாக அளித்து விட்டார்.