குஜராத் மாநகராட்சி தேர்தல்: பாஜக அபார வெற்றி

குஜராத் மாநகராட்சி தேர்தல்: பாஜக அபார வெற்றி
Updated on
1 min read

குஜராத் மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 576 வார்டுகளில் ஆளும் பாஜக 409 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

குஜராத் மாநிலத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர், பாவ் நகர் ஆகிய 6 மாநகராட்சிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. கடந்த பல ஆண்டுகளாகவே இந்த மாநகராட்சிகள் பாஜக வசம் இருந்து வருகிறது.

இந்த தேர்தலில் 6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதல்வர் விஜய் ரூபானி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு பாஜகவுக்கு ஆதரவு திரட்டினார். விறுவிறுப்பாக நடந்த இந்த தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

இந்தநிலையில் 6 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே பாஜக பல வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.

மொத்தமுள்ள 576 வார்டுகளில் ஆளும் பாஜக 409 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 33 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது. இதர கட்சிகள் 31 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

மாநகராட்சிகள் வாரியாக முடிவு நிலவரம்

அகமதாபாத் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 192 இடங்களில் பாஜக 101 இடங்களிலும் காங்கிரஸ் 15 இடங்களிலும், பிற கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

பாவ் நகர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 52 இடங்களில் பாஜக 31 இடங்களிலும் காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஜாம்நகர் மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 64 இடங்களில் பாஜக 43 வார்டுகளிலும், காங்கிரஸ் 6 வார்டுகளிலும் பிற கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ராஜ்கோட் மாநகராட்சியில் மொத்தமுள்ள 72 வார்டுகளில் பாஜக 68 இடங்களை கைபற்றியுள்ளது. காங்கிரஸ் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.

சூரத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 120 வார்டுகளில் 93 இடங்களில் பாஜக வென்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. முதன்முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி 27 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

வதோதரா மாநகராட்சியில் மொத்தமுள்ள 76 இடங்களில் பாஜக 69 வார்டுகளை வென்றுள்ளது. காங்கிரஸ் 7 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in