

மகாராஷ்டிர மாநிலத்தில் தினசரி கரோனா பாதிப்பு கடந்த 10 நாட்களில் சராசரி 2 மடங்காக உயர்ந்துள்ளதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.
இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
சிகிச்சை பெறுபவர்களில் 74 சதவீதத்துக்கும் அதிகமானோர், கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளனர். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில், தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.
கேரளாவில் கடந்த 4 வாரங்களாக, வார சராசரி கோவிட் பாதிப்பு குறைந்தபட்சம் 34,800 முதல் அதிகபட்சமாக 42,000 வரை இருந்தது. மகாராஷ்டிராவில் வார பாதிப்பு 18,200-லிருந்து 21,300 ஆக அதிகரித்துள்ளது.
தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அங்கு பிப்ரவரி 9-ம் தேதி வரை தினசரி பாதிப்பு என்பது சராசரியாக 2489 பேர் என்ற அளவில் இருந்தது. அதுபோலவே பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து 9ம் தேதி வரை சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 43,701 முதல் 34,640 ஆக குறைந்தது. ஆனால் பிப்ரவரி 10-ம் தேதிக்கு பிறகு நிலைமை மாறத் தொடங்கியது.
தொடர்ந்து கடந்த 10 நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு சராசரி 4610 என்ற அளவில் உயர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி இந்த 11 நாட்களில் மட்டும் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை கூடுதலாக 59,937 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமராவதி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. யவத்மால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புனே மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாக்பூர் மாவட்டத்திலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி கடந்த 10 நாட்களில் பரவி வரும் கரோனா வைரஸின் தன்மை குறித்து ஆய்வு நடத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வைரஸ்களின் மாதிரிகள் புனே வைரஸ் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.