

மக்கள் நலத்திட்டங்கள் செய்ய நிதி தேவைப்படுகிறது. அதனால்தான் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்த்தப்படுகிறது என்ற வாதம் நியாயமற்றது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வந்தன. தொடர்ந்து 12 நாட்களாக விலை உயர்ந்ததால், ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகரிலும், மத்தியப் பிரதேசத்தின் அணுப்பூரிலும் பெட்ரோல் லிட்டர் 100 ரூபாயைக் கடந்தது. பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் லிட்டர் ரூ.92 ரூபாய்க்கும் மேல் அதிகரித்தது. டீசல் விலையும் லிட்டர் ரூ.88க்கு மேல் உயர்ந்துவிட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, அதைத் திரும்பப் பெறக் கோரி வலியுறுத்தியுள்ளார்.
மாயாவதி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "கரோனா வைரஸ் பரவலால் ஏற்கெனவே வேலையின்மை, பணவீக்கம் ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேவையில்லாமல், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி அவர்களைத் துன்பத்தில் ஆழ்த்துவது நியாயமற்றது, தவறானது. இந்த வரி உயர்வு மூலம் கிடைக்கும் பணத்தில்தான் மக்கள் நலத்திட்டங்களைச் செய்கிறோம் என்று வாதிடுவதும் நியாயமற்றது.
மக்களின் சேமிப்பு மீதான சுமையாக மாறும், தன்னிச்சையாக பெட்ரோல், டீசல் மீது ஏற்றப்படும் விலை உயர்வை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்தால், கோடிக்கணக்கான ஏழை மக்கள், உழைக்கும் வர்க்கம், நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய உதவியாக அமையும். அரசுக்கும் சாதகமாக மாறும்" எனத் தெரிவித்துள்ளார்.